shocking incident in salem

Advertisment

ஆத்தூர் அருகே, மாமியார் மருமகள் மோதல் முடிவுக்கு வராததால், விரக்தி அடைந்த காதல் தம்பதியினர் காதில் விஷத்தை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொல்ல முயன்றபோது, சுதாரித்துக்கொண்டு தப்பி ஓடியதால் நல்வாய்ப்பாக அவர்கள் உயிர் பிழைத்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (37). நெல் கதிரடிக்கும் வாகன ஓட்டுநராக இருந்தார். இவருடைய மனைவி சத்யா (33). கடந்த 13 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அபிநயா (13) என்ற மகளும், சஞ்சித் (11) என்ற மகனும் உள்ளனர்.

வேலை தொடர்பாக வேல்முருகன் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று விடுவார். அப்போது, சத்யாவுக்கும் கணவரின் தாயார் தனலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மாமியார் மருமகள் பிரச்னை தீரும் வரை நான் வேலைக்குச் செல்வதில்லை எனக் கூறிய வேல்முருகன், கடந்த 2 மாதமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

Advertisment

shocking incident in salem

இதைப்பார்த்த தனலட்சுமி, “உன்னால்தான் என் மகனின் வாழ்க்கை வீணாகி, நிம்மதி இல்லாமல் போய்விட்டது” எனக் கூறியுள்ளார். பிப். 9ம் தேதியன்றும் மாமியார், மருகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சத்யா, கணவரிடம் முறையிடுள்ளார். அதன்பேரில் தன் தாயாரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார். ஆனால், தாயாரோ மகனையும் திட்டியுள்ளார்.

தன்னைப் பெற்ற தாயின் பக்கம் நிற்பதா, பெற்றோரை உதறிவிட்டு தன்னையே நம்பி வந்த மனைவியின் பக்கம் நிற்பதா எனத் தெரியாமல் வேல்முருகன் கலங்கித் தவித்தார். இருதலைக்கொள்ளி எறும்பு போல தவித்து வரும் கணவனின் நிலை கண்டு, சத்யாவும் மனம் உடைந்தார். முடிவே இல்லாமல் தொடரும் இந்த நிம்மதியற்ற வாழ்க்கை தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

Advertisment

இதையடுத்து பிப். 9ம் தேதியன்று மாலை, அவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மஞ்சினி அருகே உள்ள வால் கரடு பகுதிக்குச் சென்றனர். சத்யாவும், வேல்முருகனும் தங்கள் காதுகளில் விஷத்தை ஊற்றிக்கொண்டனர். குழந்தைகளுக்கும் விஷத்தைக் கட்டாயப்படுத்திக் குடிக்க வைத்துள்ளனர். கொஞ்சம் குடித்தபோது கசப்பாக இருந்ததால், அவர்கள் பெற்றோரை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

குழந்தைகள் இருவரும் அளித்த தகவலின்பேரில் உறவினர்கள் மற்றும் ஆத்தூர் காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். ஆனால் அதற்குள் சத்யாவும், வேல்முருகனும் இறந்துவிட்டனர். இதைப்பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காவல்துறையினர் சடலங்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறிதளவு விஷம் குடித்திருந்த குழந்தைகள் இருவரும் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். குடும்பத் தகராறில் கணவன், மனைவி இருவரும் காதில் விஷம் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.