Skip to main content

மதுரையிலும் ஒரு பொள்ளாச்சியா? வாட்ஸ் அப் பரபரப்பு!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020
girl


இளம்பெண்களைப் பாலியல் வலையில் சிக்கவைத்து, வன்கொடூரத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சி சம்பவமாகட்டும், சமீபத்தில் வெளியாகி இருக்கும் கன்னியாகுமரி காசியின் காம லீலைகளாகட்டும், ஆளுந்தரப்பின் ஆதரவுடன் நடைபெற்று வரும் இத்தகைய கொடூரங்கள் தமிழகத்தைத் தொடர்ந்து அதிர வைக்கின்றன. மதுரையில் இருந்தும் இப்போது ஒரு கொடூரச் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.


வாட்ஸ்அப்பில் வைரலாகும் அந்தச் செய்தியில், “மதுரையின் மையப்பகுதியான நரிமேடு பகுதியில், மிகப்பிரபலமான கல்லூரிக்கும், மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிக்கும் மிக அருகில் செல்போன் கடை, ரெஸ்டாரண்ட் கடை நடத்திவருகிறார்கள் சதாம், ஷேக் மற்றும் கவுதம் ஆகிய மூன்றுபேர். இவர்கள், தங்கள் கடையில் ரீசார்ஜ் செய்யவரும் பள்ளி, கல்லூரி மாணவிகளின் செல்போன் நம்பரைக் குறித்து வைத்துக் கொண்டு, ஆசைவார்த்தைக் கூறி பழகுவார்கள்.

அதேபோல், ரெஸ்டாரண்டில் காம்போ ஆஃபர் சலுகைகள் என சமூகவலைத்தளங்களில் விளம்பரப்படுத்துவார்கள். அதை நம்பிவரும் மாணவிகளிடம் ஆசையாகப் பேசி, காதல் வலையில் வீழ்த்துவார்கள். பின்னர் அவர்களுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து, அதைக் காட்டி அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவார்கள். கடைக்கு அருகிலிருக்கும் கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு மதுபாட்டில்கள் சப்ளை செய்வதும் இவர்களுக்கு வாடிக்கை’’ என்று இந்த மூன்று இளைஞர்களின் செல்போன் நம்பர்களையும் சேர்த்தே பரப்பப்பட்டிருந்தது.

இதற்கு அடுத்தநாளே, “இந்த மூவரின் வலையில் சிக்காத மாணவி ஒருவர் புகார் கொடுத்துவிட்டார். இதுகுறித்து மதுரை தல்லாகுளம் போலீசார் மூன்றுபேரையும் பிடித்து விசாரித்து வருகிறார்கள்’’ என்று மீண்டும் ஒரு பதிவு வாட்ஸ்அப்பில் வந்து பரபரப்பைக் கூட்டியது. உடனடியாக இதன் பின்னணியை அறிய விசாரணையில் இறங்கினோம்.
 


தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் மலைச்சாமியைத் தொடர்புகொண்டோம். “அந்த மூன்றுபேரும் அவர்களாகவே முன்வந்து, தொழிற்போட்டி காரணமாக எங்கள்மீது அவதூறு பரப்புகிறார்கள். இப்படிச் செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்கள். இதுதொடர்பாக சைபர் கிரைமில் விசாரணை தொடங்கி இருக்கிறது. இன்னும் சில நாட்களில், உண்மை தெரிந்துவிடும். அதன்பிறகுதான் எதுவும் சொல்லமுடியும். மேலும், பாதிக்கப்பட்டதாக யாரும் இதுவரை எங்களிடம் புகாரளிக்கவில்லை’’ என்று முடித்துக் கொண்டார்
வாட்ஸ்அப் செய்தியில் இடம்பெற்றிருக்கும் சதாம், ஷேக் மற்றும் கவுதம் ஆகியோரை நாம் தொடர்புகொண்டோம். சுவிட்ச்-ஆஃப் ஆகியிருந்தது. அவர்களின் கடைகளும் பூட்டப்பட்டிருந்தன. இதற்கிடையே, இந்த மூன்று இளைஞர்களும் கமிஷனர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தகவல் கசிந்தது. உடனடியாக நாம் அங்கு விரைந்தோம். கமிஷனர் அலுவலகத்திற்கு இளைஞர்களின் பெற்றோர் வந்திருந்தனர்.

அவர்களிடம் நாம் பேசியபோது, மிகுந்த தயக்கத்துடன்தான் சம்மதித்தனர். சதாமின் தந்தை சலீம், “சார் இவ்வளவு கொடுமையான செயலில் ஈடுபடுகிற அளவுக்கு நாங்க பிள்ளை வளர்க்கலை. தொழில் போட்டியில் இப்படியெல்லாம் அவதூறு பரப்பிட்டு இருக்காங்க. மூணு பசங்களோட செல்போனையும் போலீஸ்கிட்ட கொடுத்துட்டோம். அதுல இருக்கிற ஒரு பொண்ணோட நம்பருக்கு போலீசார் அழைச்சி விசாரிச்சப்ப, அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. வாட்ஸ்அப்பில் வந்தது பொய்ன்னு அந்தப் பொண்ணு சொல்லிடுச்சி. அதையும் ரொம்பப் பெரிசா பரப்பிட்டு இருக்காங்க’’ என்றார்.

கவுதமின் தந்தையோ, “எங்க பசங்க ஒண்ணாத்தான் காலேஜில் படிச்சாங்க. இப்போ சேர்ந்து தொழில் பண்றாங்க. ஆன்லைனில் விளம்பரம் செய்து, அதன்மூலமா ஏரியாவில் நல்ல வியாபாரம் கிடைச்சது. அதைப் பொறுத்துக்காம இப்படிப் பரப்பிட்டு இருக்காங்க. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விசாரிக்கட்டும். உண்மை என்னன்னு உலகத்துக்கு தெரியட்டும்’’ என்று ஆதங்கம் தெறிக்க பேசினார்.

 


ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமா தலைமையில் இதுதொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை தொடங்கி இருக்கிறது. கமிஷனர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது, “தனிப்படை ஒண்ணு அமைச்சிருக்காங்க. பாதிக்கப்பட்ட மாணவிகள் யாராக இருந்தாலும் தைரியமா முன்வந்து சொல்லலாம். அவங்களோட விவரங்கள் பாதுகாக்கப்படும்ன்னு மூணு செல்போன் நம்பர்கள் கொடுத்திருக்காங்க சார். அந்தக் காலேஜுக்கும் தகவல் சொல்லி இருக்கிறோம். காலேஜ் முதல்வரும், எங்கள் மீது அவதூறு பரப்புறாங்கன்னு புகார் கொடுத்திருக்காங்க’’ என்றனர்.

இத்தனை களேபரத்துக்கு மத்தியில், “மதுரைக்குப் பக்கத்தில் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர் அமைச்சரின் பேரனும், இந்த மூன்று இளைஞர்களும் நெருங்கிய நண்பர்கள் என்ற தகவல், அவர்களின் செல்போனில் அடிக்கடி தொடர்புகொண்ட கால் லிஸ்ட் மூலம் தெரியவந்துள்ளது. அமைச்சரின் பேரனுடன் கொடைக்கானலில் இவர்கள் போட்ட கும்மாளம் வேற லெவல்’’ என மீண்டுமொரு செய்தி வாட்ஸ்அப்பில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
 

 

http://onelink.to/nknapp


வாட்ஸ்ஆப்பில் பரப்பும் நபரைப் பிடித்தால் உண்மை தெரிந்துவிடும். அவரை நெருங்கி விட்டோம் என்கிறது காவல்துறை. மதுரை மக்கள் தங்கள் மாநகரிலும் ஒரு பொள்ளாச்சியா என்ற பதற்றத்தில் உள்ளனர்.


 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராய மரணம்; நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
kallakurichi fake liquor incidentl Actor Vijay consoled

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 42 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய் கள்ளச்சாராயத்தால் மரணமடைந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்ல கள்ளக்குறிச்சி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு வந்துள்ள விஜய், அங்கு சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

Next Story

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்; அதிகரிக்கும் உயிர்பலி எண்ணிக்கை!

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Increasing on Kallakurichi scam incident

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 32 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் என பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகே  முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். 

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மதுவிலக்கு பிரிவைச் சேர்ந்த கவிதா, பாண்டி, செல்வி,பாரதி, ஆனந்தன், சிவச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், மனோஜ் உள்ளிட்டோரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு ஒப்படைத்து தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்தது. 

இதனிடையே, கள்ளக்குறிச்சி விஷச்சாரய மரணம் தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (20-06-24) அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் டி.ஜி.பி, மதுவிலக்குத்துறை அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நிவாரணம், உயர் சிகிச்சை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.