Skip to main content

"அம்மா உயிருடன் வருவார்...!" தாயின் சடலத்தோடு 22 நாட்கள் இருந்த குழந்தைகள்!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

shocking incident in dindigul
                                                                   இந்திரா 


தேனியைச் சேர்ந்தவர் அன்னை இந்திரா. இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை செய்துவந்தார். இந்திராவின் கணவர் பொன்ராஜ். இந்திரா-பொன்ராஜ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது குழந்தைகளுடன் இந்திரா திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள, டிரஸ்சரி காலனி பகுதியில், தனது 12 வயது மகன் சுதர்சன், 8 வயது மகள் மெர்சி ஆகியோருடன் வாடகை வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாகக் குடியிருந்துவந்தார்.

 

இதற்கிடையே கடந்த 3 மாதங்களாக இந்திராவின் சகோதரியான வாசுகியும் இவர்களுடனேயே தங்கிவிட்டார். ஏற்கனவே சிறுநீரகத் தொற்றுக் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த காவலர் இந்திரா, காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால், அவர் விருப்ப ஓய்வு பெறுவது குறித்து எந்தத் தகவலையும் தனது மேலதிகாரிகளுக்கு முறையாகத் தெரிவிக்காமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அவர் அடிக்கடி விடுப்பு எடுப்பது குறித்து விளக்கம் கேட்டு, கடந்த 8-ஆம் தேதி இந்திராவின் வீட்டிற்கு, போலீஸார் சென்றுள்ளனர்.

 

shocking incident in dindigul
                                                   டி.எஸ்.பி. மணிமாறன்

 

ஆனால், இந்திரா வீட்டில் இல்லை எனக்கூறி இந்திராவின் குழந்தைகளும் அவரது சகோதரியும் போலீசாரை திருப்பி அனுப்பிவிட்டனர். இந்நிலையில், அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே, அருகிலிருந்தோர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த டவுன் டி.எஸ்.பி மணிமாறன் தலைமையிலான போலீஸார், இந்திராணி வீட்டில் சோதனை செய்ததில், ஒரு அறையில் இந்திராவின் அழுகிய உடல் துணியால் சுற்றப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

 

shocking incident in dindigul

 

இதுகுறித்து  குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள் என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், 'எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்' என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார். உடல் மிகவும் அழுகிய காரணத்தினால் வீட்டிலேயே டாக்டர்கள் உடற்கூறாய்வு செய்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த பெண் காவலர் இந்திராவிற்கு சர்ச் பாதிரியார் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரும் அடிக்கடி இந்திராவின் வீட்டிற்கு வந்துசென்றுள்ளார். மேலும், உடல்நலம் பாதித்த இந்திராவை, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல், வீட்டில் வைத்து குணமடைவதற்குப் பிரார்த்தனை செய்துள்ளனர். சர்ச் பாதிரியாரின் இந்தத் தொடர் நடவடிக்கையின் காரணமாக, இந்திராவின் இரு குழந்தைகளும் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அதிர்ச்சி தரும் இந்தச் சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இறந்த தாயின் உடலுடன் அவரது இரு குழந்தைகளும் 22 நாட்களாக வீட்டில் இருந்த சம்பவம், திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உயிரிழந்த காவலர் இந்திரா, கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு அந்தப் பாதிரியாரின் மூலம் மதமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்