Skip to main content

“உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் தடை விதிப்பது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன் 

Published on 22/05/2025 | Edited on 22/05/2025

 

shocking that High Court has stayed Supreme Court’s verdict vc issue

சிதம்பரம் ரயில் நிலையம் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 6 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டது.  இதனைப் பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் ரயில் நிலையத்தைத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற  விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் பங்கேற்று ரயில் நிலைய திறப்பு கல்வெட்டை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர்,  “சிதம்பரம் ரயில் நிலையத்தில்  அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம்- தஞ்சாவூர் ரயில் பாதையை இரு  வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும். அதேபோல் காரைக்கால் வரையிலும் இரு  வழி ரயில் பாதை அமைக்க  வேண்டும்.  சிதம்பரத்தை சந்திப்பு நிலையமாக கொண்டு காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம் வழியாக அரியலூர் வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட  நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதனையும் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

போக்குவரத்து வசதி உள்ள ஒரு மாநிலம்தான் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும். தென்மண்டல ரயில்வே வளர்ச்சி என்பது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வடக்கு மண்டல ரயில்வே துறை வளர்ச்சி அடைந்திருப்பதை போல தென் மண்டல ரயில்வேயும் வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என மத்தி ரயில்வே அமைச்சகத்துக்கு திருமாவளவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், பாஜக மாவட்ட தலைவர் தமிழழகன், விசிக மாவட்டச் செயலாளர்கள் அரங்கதமிழ்ஒளி, மணவாளன், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், சிதம்பரம் ரயில் பயணிகள் நலச் சங்க நிர்வாகிகள் அப்துல் ரியாஸ், சிவராம வீரப்பன், அம்பிகாபதி, பரங்கிப்பேட்டை பயணியர் நலச் சங்கத்தின் தலைவர் அருள்முருகன் மற்றும் ரயில்வேத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

shocking that High Court has stayed Supreme Court’s verdict vc issue

விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,  “தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல், கல்விக்காக ஒதுக்க வேண்டிய நிதியும் தராமல் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று தமிழக அரசுக்கு தரவேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்த செல்கிறார். எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் எடப்பாடி பழனிச்சாமி  திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக விமர்சனத்தை வைத்துள்ளார். அது ஒரு அரசியல் விமர்சனம் அவ்வளவுதான்.

புலனாய்வு துறைகளை  மத்திய அரசு பாஜக அரசு தனது அரசியல் பகைவர்களுக்கு எதிராக ஏவி வருகிறது. திமுக தலைமையிலான அரசுக்கு பல நெருக்கடிகளை அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கிறது. அதில் ஒன்றுதான் டாஸ்மாக் நிறுவனத்தின் மீதான சோதனை என்கிற செயலை சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளால் அதனை இன்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்து அமலாக்க துறையின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த காரணத்தினால், இடைக்காலத் தடை போடப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம்.

துணைவேந்தர்கள் நியமனம் செய்வதில் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உயர் நீதிமன்றங்கள் தடைவிதித்ததாக சான்றுகள் இருப்பதாக தெரியவில்லை. உச்சநீதிமன்றம் பல்கலைக்கழக மசோதாக்களை ஏற்றுச் சட்டம் ஆக்கி உள்ளது. அதன் அடிப்படையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் வேந்தர் என்கிற முறையில் முதலமைச்சருக்கு உறுதியாகி உள்ளது. இதனையும் தமிழக அரசு சட்டபூர்வமாக சந்திக்கும்” என்றார்.

சார்ந்த செய்திகள்