/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fish-trader_0.jpg)
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ளது துலுக்கா நத்தம் காலனி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் 55 வயது முத்தம்மாள். இவர் கூடையில் மீன் கருவாடு சுமந்து கொண்டு சென்று ஊர் ஊராகசென்று விற்பனை செய்து வருகிறார். கடந்த 11ஆம் தேதி மீன், கருவாடு விற்கச் சென்ற முத்தம்மாள் வீடு வந்து சேரவில்லை. இதுகுறித்து கண்டமங்கலம் காவல் நிலையத்தில் முத்தம்மாளின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி பாக்கம் கிராமத்தில் உள்ள ஒருகரும்பு வயலில் முத்தம்மாள் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப் இன்ஸ்பெக்டர் பிரபு, பிரேம் குமார், கணேசன், பிரகாஷ் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டார்.
அதன்படி தனிப்படை போலீசார் குற்றவாளியைத்தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் பாக்கம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த 22 வயது விநாயகம் என்ற இளைஞர் கிராம நிர்வாக அலுவலர் பாலலட்சுமி முன்பு சரணடைந்து முத்தம்மாளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அதோடு போலீசாரிடம் விநாயகம் அளித்த வாக்குமூலத்தில், “விவசாய டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறேன். கரும்பு தோட்டத்திற்கு அருகில் உள்ள செங்கல் சூளையில் டிராக்டர் மூலம் லோடு ஓட்டிக் கொண்டிருந்தேன். கஞ்சா புகைக்கும் பழக்கம், ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கம் காரணமாக எனக்கு கடன் அதிகமாக இருந்தது. கடனை அடைப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது முத்தம்மாள் கழுத்து நிறைய நகைகளுடன் ஊர் ஊராக கருவாடு விற்க செல்வது நினைவுக்கு வந்தது.
மேலும் எனக்கு முத்தம்மாளை நன்றாக தெரியும். அவர் பல முறை கழுத்து நிறைய நகை அணிந்து கொண்டு வந்ததை பார்த்தேன். அவரிடமிருந்து நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டேன். ஏற்கனவே சிலமுறை வியாபாரம் முடிந்து திரும்பும் முத்தம்மாளை எனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அவரது ஊரில் விட்டுள்ளேன். எனவே அவரிடம் உள்ள நகைகளை பறிக்க முடிவு செய்தேன். அதன்படி கடந்த 11ஆம் தேதி அதிகாலை நிறைய மது குடித்தேன். இதனால் போதை தலைக்கேறியது பிற்பகல் 2 மணி அளவில் முத்தம்மாளை தேடி சென்று சந்தித்தேன். அவரிடம் நான் வேலை செய்யும் செங்கல் சூளையில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் மொத்தமாக கருவாடு வேண்டும் என்று கூறினேன். அவரும் அதை நம்பி அதிக அளவு கூடையில் கருவாடு நிரப்பிக்கொண்டு என்னுடன் புறப்பட்டார். அப்படி அழைத்துச் செல்லும்போது குறுக்கு வழியாக சென்றால் செங்கல் சூளைக்கு சீக்கிரம் செல்லலாம் என்று கூறி அவரை கரும்புத் தோட்டத்தின் வழியாக அழைத்துச் சென்றேன்.
அப்படி செல்லும்போது கரும்பு தோட்டத்தில் யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு முத்தம்மாள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கொத்தாகப் பிடித்து இழுத்தேன். அவர் கத்தி கூச்சல் போட்டார் அவரது சேலை முந்தானையால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் அவர் அணிந்த நகைகள், கொலுசு மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் தப்பினேன். அதில் சில நகைகள் எங்கள் வீட்டில் பதுக்கி வைத்தேன். கொலை செய்த பயம் காரணமாக அதிக அளவில் குடித்தேன். இருப்பினும் அவரை கொலை செய்த பயம் அதிகரித்தது. எங்கள் தெருவில் உள்ள எனது நண்பர் சதீஷ்குமாரை சந்தித்து நடந்த சம்பவத்தைக் கூறினேன். மீதம் இருந்த நகைகளை அவரிடம் கொடுத்து எனக்கு உதவி செய்யுமாறு கேட்டேன்.
அவரும் உதவுவதாக கூறினார். அதன்பிறகு மூதாட்டி உடல் அழுகி துர்நாற்றம் வீசினால் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்பதால் அந்த உடல் மீது இரசாயனத் கரைசலை ஊற்றினேன். அதனால் 15 நாட்கள் கடந்தும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. இனிமேல் தப்பிவிடலாம் என எண்ணினேன் ஆனாலும் போலீசார் என்னை நெருங்கவே கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தேன்”. இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது கூட்டாளி சதீஷ் குமார் என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து வெள்ளி கொலுசுகள் நகை பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நகை பணத்திற்கு ஆசைப்பட்டு இரண்டு இளைஞர்கள் செய்த கொடூர சம்பவம் கண்டமங்கலம் பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)