
சேலத்தில், மது போதையில் தினமும் அடித்து உதைத்ததோடு, விருப்பம் இல்லாதபோதும் உடலுறவுக்கு கட்டாயப்படுத்தியதால் பொறுமையிழந்த மனைவி, ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கட்டை மற்றும் கல்லால் அடித்துக் கொலை செய்ததாகப் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியைச் சேர்ந்தவர் சேதுபதி(33). மாட்டிறைச்சி வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி காவியா(31) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சேதுபதிக்கு குடிப்பழக்கம் இருந்துவந்தது. தினமும் மது போதையில் வீட்டுக்கு வரும் அவர், மனைவியிடம் தகராறு செய்வது, அடித்து உதைப்பதுமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், காவியாவுக்கு பக்கத்து வீட்டில் தனியாக வசித்து வரும் சதீஸ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரின் கொடுமைகளைச் சொல்லி அழுதுள்ளார். அவரும், காவியாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதில் அவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்துள்ளது. சேதுபதி ஊரில் இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் இருக்கும் அளவுக்கு நட்பு இறுக்கமாகி உள்ளது.
இதையறிந்த கணவர் சேதுபதி, மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனாலும், காவியா ஆண் நண்பருடனான தொடர்பைக் கைவிடவில்லை. இந்நிலையில் டிச.17ம் தேதி இரவு குடிபோதையில் வந்த சேதுபதி, காவியாவிடம் தகராறு செய்தார். அதையறிந்த சதீஸ்குமார் அவர்களின் வீட்டுக்குச் சென்று இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், சேதுபதி மேலும் ஆத்திரம் அடைந்து சதீஸையும் தாக்க முயன்றுள்ளார்.
இதையடுத்து காவியாவும், சதீஸ்குமாரும் சேர்ந்து வீட்டுக்குள் இருந்த உருட்டுக்கட்டை, கல்லால் தாக்கி அவரைக் கொலை செய்துள்ளனர். அதன்பிறகு, தண்ணீர் சேமித்து வைக்கும் பிளாஸ்டிக் டிரம்மில் சேதுபதியின் சடலத்தை மறைத்து வைத்துள்ளனர். சடலத்தில் இருந்து கிளம்பிய துர்நாற்றத்தால் டிரம்முடன் எங்காவது சென்று தூக்கி எறிந்து விடும் திட்டத்துடன் டிச. 24ம் தேதி இரவு அவர்கள் டிரம்மை வீட்டுக்கு வெளியே தூக்கி வந்தனர். அதில் இருந்து கிளம்பிய கடும் துர்நாற்றத்தால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்த பிறகுதான் காவியாவின் சதித்திட்டம் தெரியவந்தது.
இந்த கொலை வழக்கில் காவியா, சதீஸ்குமார் ஆகிய இருவரையும் கிச்சிப்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையில் காவியா அளித்துள்ள வாக்குமூலத்தின் சுருக்கம்: ‘என் கணவர் சேதுபதி, மது குடித்துவிட்டு வந்து தினமும் என்னை அடித்து சித்ரவதை செய்துவந்தார். எனக்கு விருப்பம் இல்லாதபோதும் உடலுறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்துவார். அதற்கு மறுத்தால் தூக்கிப்போட்டு மிதிப்பார்.
இந்நிலையில் எனக்கு சதீஸ்குமாருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. அவருடைய நட்பையும் துண்டித்துவிடுமாறு கணவர் கண்டித்தார். கடந்த 17ம் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்து என்னிடம் தகராறு செய்தார். அப்போது நானும், சதீஸ்குமாரும் சேர்ந்து என் கணவரை அடித்துக் கொலை செய்தோம். அதன்பிறகு, அவருடைய முகத்தில் பிளாஸ்டிக் டேப்பால் சுற்றினோம். அதையடுத்து சடலத்தைத் தண்ணீர் பிடித்து வைக்கும் டிரம்மில் போட்டு அடைத்தோம். காவல்துறையினர் இந்தப் பகுதியில் அடிக்கடி ரோந்து வருவதால் சடலத்தை வெளியே கடத்திச்சென்று புதைக்க முடியாமல் தடுமாறினோம்.
ஆனால் ஒரு வாரமாக சடலம் டிரம்மிற்குள்ளேயே கிடந்ததால் அதிலிருந்து துர்நாற்றம் கிளம்பியது. நாற்றத்தைத் தாங்க முடியாமல்தான் வீட்டுக்குள் இருந்து வெளியே கொண்டு வந்து வைத்தோம். அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தபோது அக்கம்பக்கத்தினர் எங்களை காவல்துறையில் காட்டிக்கொடுத்துவிட்டனர்’. இவ்வாறு காவியா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
கைதான காவியா, சதீஸ்குமார் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் இரு குழந்தைகளும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.