/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/boat-art_36.jpg)
தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்கிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவுகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும் தற்போது அரங்கேறி வருகின்றன. அதோடு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கக் கோரி மீன்பிடித் தொழிற்சங்கங்கள் சார்பில் அவ்வப்போது வேலை நிறுத்த போராட்டமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்குவாடியை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று (07.12.2024) உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் நேற்று இரவு 11 மணிமுதல் இன்று (08.12.2024) அதிகாலை 02 மணி வரை மீன்பிடித்து விட்டுக் கரை திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் நாளை (09.12.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)