/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/red-amb-art.jpg)
சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.
இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)