Advertisment

“கொல்லங்குடி கருப்பாயி முற்போக்கு கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பு” - சண்முகம் இரங்கல்

Shanmugam condoles Kollangudi Karupai

சிவகங்கை மாவட்டத்தில் மதுரை தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி. பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிய இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். பின்னர் வந்த பிற இசைக் கலைஞர்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.

Advertisment

அனைத்திந்திய வானொலியில் நிகழ்கலை நிகழ்த்துனராகத் தன் பணியைத் தொடங்கிய இவர், அங்கு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் 1993இல் கலைமாமணி விருது பெற்றார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கொல்லங்குடி கருப்பாயி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சி.பி.எம். மாநில தலைவர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “நாட்டுப்புற இசைக் கலைஞரும், கலைமாமணி விருதுபெற்றவருமான கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியைச் சேர்ந்த கருப்பாயி அம்மாள், இயல்பிலேயே நாட்டுப்புற பாடல்களை பாடும் திறன் பெற்றிருந்தார். முகவை கலைக்குழுவில் அங்கம் வகித்த அவர், தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் பாடியுள்ளார். மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மாநாட்டிலும் பாடியுள்ளார். சில திரைப்படங்களிலும் பாடி நடித்துள்ளார். அவர், கட்சி உறுப்பினராகவும் இருந்துள்ளார். அவரது மறைவு முற்போக்கு கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
cpm p shanmugam sivagangai district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe