Shanmugam accuses BJP of politicizing Kamal's remarks on Kannada language

மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். கமலின் ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார் பங்கேற்றார்.

சிவராஜ்குமார் குறித்து மேடையில் பேசிய கமல், என் மகனாகவும் ரசிகனாகவும் சிவ ராஜ்குமார் வந்திருப்பதாக சொன்னார். பின்பு அவரது தந்தை ராஜ்குமார் குறித்து தனது நினைவுகளை குறிப்பிட்டு, சிவ ராஜ்குமாரை பார்த்து, “இவர் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதனால்தான் அவர் இங்கு இருக்கிறார். அதனால்தான் என் பேச்சை ஆரம்பிக்கும் போது, உயிரே, உறவே, தமிழே என ஆரம்பித்தேன். தமிழில் இருந்து பிறந்தது தான் உங்கள் பாஷையும். அதனால் நீங்களும் அதில் உட்படுவீர்கள்” என்றார். அதாவது தமிழில் இருந்து தான் கன்னடம் மொழி உருவானது என்று கமல் சொன்னது தற்போது கர்நாடகாவில் எதிர்ப்புகளை சம்பாதித்தது.

Advertisment

கன்னட மொழியை கமல் அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பா.ஜ.க. கர்நாடக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி, கன்னட சலுவளி வாட்டாள் பக்‌ஷா கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட சில கன்னட அமைப்புகள் கமலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் போராட்டல் வெடிக்கும், அவரது படங்கள் எங்கு ஓடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதோடு பெங்களூருவில் தக் லைஃப் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதற்காக வாழ்த்தி வைத்திருந்த ரசிகர்களின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழித்து, கமல்ஹாசனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இவர்களை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா, கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. பாவம் கமல்ஹாசனுக்கு அது தெரியாது என தனது கண்டனத்தை செய்தியாளர்கள் முன்னிலையில் பதிவு செய்திருந்தார். அதோடு கர்நாடக அமைச்சர் சிவராஜ், கமல் மன்னிபு கேட்க வில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்கப்படும் என்று எச்சரிந்தார். இந்த பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க முடியாது என சூசகமாக தெரிவித்திருந்தார். மேலும், அரசியல்வாதிகள் மொழிகளை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்றும் மொழியியல் அறிஞர்கள், வல்லுநர்கள் தான் இதற்கு சரியான பதில் சொல்வார்கள் என்றும் கூறியிருந்தார். அதோடு அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என தனது விளக்கத்தை கூறியிருந்தார். இருப்பினும் கர்நாடகாவில் எதிர்ப்பு குரல்கள் ஓய்ந்தபாடில்லை.

இதனிடையே தமிழகத்தில் இருந்து நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவு குரல்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் சி.பி.எம். மாநில செயலாளர் பெ.சண்முகம், “கன்னட மக்கள், அவர்களது மொழி சிறந்தது என்று சொல்லிக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. அவரவர்க்கு அவர்களின் தாய்மொழி மேலானது. அந்த வகையில் கன்னட மக்கள் அவர்களது மொழியை வளர்க்கவும் பெருமை பேசிக்கொள்ளவும் அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. நடிகர் கமல்ஹாசன் மொழியியல் வல்லுநர் இல்லை. ஏற்கெனவே வல்லுநர்கள் கூறிய கருத்தைத்தான் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு உடன்பாடு இல்லை என்றால், கருத்தைக் கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும். மாறாக கர்நாடகாவில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதும், இரு மாநிலப் பிரச்சினையாக மாற்றுவதும் பாஜகவின் திட்டமிட்ட அரசியல். இதை முற்றிலும் தடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.