Skip to main content

’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி

g

 

 தமிழகத்தில் வலுவாக காலூன்றுவதற்கு அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது அவசியம் என்று துக்ளக் வார இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கூறினார்.


 துக்ளக் வார இதழின் 49 ஆம் ஆண்டு நிறைவு விழா கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை தாங்கிய துக்ளக் வார இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசியது:   துக்ளக்கின் முன்னாள் ஆசிரியர் சோ பல்வேறு தருணங்களில் என்னை துக்ளக்கின் அடுத்த ஆசிரியராக முன்நிறுத்தி வந்தார். இருப்பினும் துக்ளக் வாசகர்கள் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனக் கூறி துக்ளக்கின் ஆசிரியராவது தொடர்பாக நான் அவருக்கு உறுதி அளிக்கவில்லை.

 


 இந்நிலையில் சோ மறைந்த பிறகு துக்ளக்கை நிறுத்தும் நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். அரசியல் மற்றும் சமூக அக்கறையுள்ள வாசகர் வட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதே சோவின் ஆசையாக இருந்தது. அதற்கு நான் ஒரு காரணியாக இருந்து வருகிறேன். துக்ளக் ஒரு நடுநிலையான பத்திரிக்கை இல்லை என பலதரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அது தவறு, பாஜக தற்போது அவசியம் என நாங்கள் கருதுகிறோம். இதற்காக காங்கிரஸ் தேவையில்லை என்ற முடிவுக்கு துக்ளக் வரவில்லை. இந்த நேரத்துக்கு இது உகந்தது என்ற முடிவுக்கு வருவது தான் நடுநிலை. இதுபோல பல்வேறு தருணங்களில் துக்ளக் தனது நடுநிலையை நிரூபித்துள்ளது.


 

பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றச்சாட்டு வைக்க முடியாதவர்கள் அதிகப்படியாக அவர் மீது கூறும் குற்றச்சாட்டு அவர் வெளிநாடுகளுக்கு அதிகளவில் பயணம் மேற்கொள்கிறார் என்பது தான். ஆனால், அவரது வெளிநாட்டு பயணங்களுக்குப் பின்னர் தான் உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. காங்கிரஸ் தன் மீதான குற்றத்தை மறைக்கவே ரபேல் ஒப்பந்தத்தில் பாஜக தவறிழைத்திருப்பதாக குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், அதை நிரூபிக்கத் தேவையான எந்தவொரு ஆதாரமும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினரிடம் இல்லை. ஃபோபர்ஸ் ஊழலை நிரூபித்தற்காக நான் கைது செய்யப்பட்டேன். இதுபோல காங்கிரஸ் நடத்திய பல்வேறு ஊழல்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால், பாஜகவின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் இதுவரை ஊழல் இல்லை. 70 ஆண்டுகால இந்திய வரலாற்றில் ஊழலற்ற ஆட்சியை அளித்து வரும் கட்சி பாஜக மட்டுமே.  ரபேல் ஊழலில் தவறு நடக்கவில்லை என உச்சநீதிமன்றமே சான்றளித்துள்ளது. இதற்கு மேல் பாஜகவின் ஆட்சிக்கு சான்று தேவையில்லை.


 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக உருவாக்குவதற்காகப் பல கட்சிகள் கடினமாக உழைத்து வருகின்றன. ஆனால், அவர் இப்போதும் செல்லப் பிள்ளையாகவே இருந்து வருகின்றார். பிரமதர் வேட்பாளராக உருவாகும் பக்குவம் ராகுல் காந்தியிடம் இல்லை. 


பாஜகவை எதிர்க்கும் கட்சியினரிடம் ஒற்றுமை இல்லை. அவர்களுக்கு நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். ராகுல் காந்தியை ஆதரிக்கும் திமுக உள்ளிட்ட பலரும் சுய லாபத்திற்காக மட்டுமே ஆதரிக்கின்றனர். வலுவான ஆட்சியை வழங்க வேண்டும் என்பது அவர்களது நோக்கமல்ல. 


 பாஜக அறிமுகப்படுத்தும் அனைத்துமே தவறான திட்டங்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலையில் பாஜக தற்போதுள்ளது. இதை மாற்றி தமிழகத்தில் வலுவாக காலூன்றுவதற்கு எதிர்வரும் தேர்தல்களில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது அவசியம் என்பது துக்ளக்கின் கருத்து. 

 

காமராஜர், கக்கன் போன்ற எளிமையான தமிழர்கள் ஆட்சி செய்த தமிழகத்தில் ஊழல் கலாசாரத்தைக் கொண்டு வந்தது திமுக. தமிழகத்தில் நரேந்திர மோடியின் வருகையைத் தடுப்பதற்காக கூட்டணி உருவாக்க முயற்சித்து வருகின்றனர். இதற்கு திமுக தலைமை தாங்கி வருகிறது. இதைத் தடுத்து நிலையான ஆட்சியை மத்தியில் பாஜக வழங்க வேண்டும் என்றால் அதற்கு தமிழகத்தில் உறுதியான துணை வேண்டும். இதை அதிமுகவால் மட்டுமே வழங்க முடியும் என்றார்.


  பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.கோபண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்பி கே.சுப்பராயன், திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஐகோகா சுப்பிரமணியம், உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். 

 

நிகழ்ச்சியில் முன்னதாக, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட துக்ளக் இதழின் முன்னாள் ஆசிரியர் சோ எழுதிய எங்கே பிராமணன் என்ற நூல் வெளியிடப்பட்டது. 
 இதைத்தொடர்ந்து வாசகர்களின் கேள்விகளுக்கு துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பதிலளித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தற்போது அதிமுகவை விட திமுக மிகுந்த பலத்துடன் காணப்படுகிறது. அதிமுகவுடன் ஒப்பிடுகையில் திமுக நிலையான தலைமையைக் கொண்டு கட்டுக்கோப்பாகச் செயல்படும் கட்சியாக உள்ளது. எனவே எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன். தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு புரட்சியின் மூலம் பதவி கிடைத்தது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி செய்யாமலயே பதவி கிடைத்தது, டிடிவி தினகரனுக்கு தேர்தலில் வெற்றி பெற்றும் பதவி கிடைக்கவில்லை, மு.க.ஸ்டாலினுக்கு அவரது தந்தை இறந்ததால் பதவி கிடைத்தது என்று கருத்து தெரிவித்தார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்