Skip to main content

  பெரிய மனிதர்களுக்காக மாணவிகளுக்கு பாலியல் வலை: சிபிஐ விசாரணை தேவை! அன்புமணி ராமதாஸ்

Published on 17/04/2018 | Edited on 17/04/2018
ar

 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை :  

’’மாவட்டத்திலுள்ள தனியார் கலை - அறிவியல் கல்லூரியில் பணியாற்றிய நிர்மலா தேவி  என்ற உதவிப் பேராசிரியர், சில பெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என்று தமது மாணவிகளைக் கட்டாயப்படுத்தும் குரல் பதிவு வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய உதவிப் பேராசிரியை, சில பெரிய மனிதர்களின் கைப்பாவையாக மாறி, மாணவிகளை சாக்கடையில் தள்ள முயன்றிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் அறிவியல் கணிதப் பிரிவில் மூன்றாம் ஆண்டு பயிலும் 4 மாணவிகள் தான் நிர்மலா தேவியால் பாலியல் தேவைகளுக்கு இணங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த  நான்கு மாணவிகளிடமும் செல்பேசியின் ஒலிப்பெட்டி (ஸ்பீக்கர்) மூலம் பேசிய உதவிப் பேராசிரியை, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டிய உயர்பதவியில்  இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுகிறார். அதற்கு சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒப்புக்  கொண்டால் அவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்படும்; பட்ட மேற்படிப்பில் எளிதாக இடம் வாங்கித் தருவதுடன், அதிலும் அதிக மதிப்பெண் வாங்கித் தரப்படும்; இதற்கெல்லாம் மேலாக  அவர்கள் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில் மாதந்தோறும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை வரவு வைக்கப்படும் என்றும் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி ஆசை காட்டுகிறார்.

 

பேராசிரியையின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போகும் மாணவிகள், அதெல்லாம் தங்களுக்கு ஒத்துவராது என்று உடைந்த குரலில் கூறுகின்றனர். அதைப் பொருட்படுத்தாத நிர்மலா தேவி, ‘‘ நீங்கள் உங்களின் பெற்றோரிடம் தெரிவித்து விட்டு கூட இந்த திட்டத்திற்கு உடன்படலாம். இதுபோன்ற வாய்ப்புகள் எப்போதாவது தான் கிடைக்கும். கல்வி சார்ந்த அனைத்து விஷயங்களையும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் மூலம் சாதித்துக் கொள்ளலாம். காமராசர் பல்கலைக்கழகத்தை முடிந்தவரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான ‘செட்’ தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெற ஏற்பாடு செய்கிறேன்’’ என்றும் மூளைச்சலவை செய்கிறார். அதற்கும் மாணவிகள் உடன்படாத நிலையில், அடுத்த 3 நாட்களில் பதில் கூறும்படியும், இவ்விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்றும் நிர்மலா தேவி கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, ஆளுனருக்கு அருகில் நின்று வீடியோ எடுக்கும் அளவுக்கு தமக்கு செல்வாக்கு இருப்பதாகவும், தம்மால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்றும் நிர்மலாதேவி கூறியுள்ளார்.

 

கல்லூரிகள் கல்வியையும், நீதி, நேர்மை, ஒழுக்கம் போன்ற வாழ்க்கை நெறிகளையும் கற்றுத்தர வேண்டிய இடமாகும். அங்கு பணியாற்றும் ஆசிரியர்களை மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோருக்கு இணையாகவும், கடவுளாகவும் பார்க்கின்றனர். அத்தகைய உயர்ந்த இடத்தில் இருந்து மாணவிகளை வழிநடத்தியிருக்க வேண்டிய பேராசிரியை ஒருவர், பாலியல் தரகர் நிலைக்கு இறங்கி, மாணவிகளுக்கு பாலியல் வலை வீசியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். இது அவர் ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயமாகத் தோன்றவில்லை. பாலியல் தேவைகளை நிறைவேற்றும் மாணவிகளுக்கு தேர்வுகளில் அதிக மதிப்பெண், உயர்கல்வியில் இடம், மாதம் தோறும் பணம், வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகளிலும், தகுதித் தேர்வுகளிலும் வெற்றி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்படுவதைப் பார்க்கும் போது, அதிகாரத்தில் உயர்நிலையில் உள்ள யாரோ ஒரு பெரிய மனிதரின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காகத் தான் கல்லூரி மாணவிகளை இணங்க வைக்க முயற்சி நடந்துள்ளது என்பதை உணர முடிகிறது. சமுதாயத்தின் புற்றுநோயான அந்த பெரிய மனிதரையும், அவருக்காக அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட காமராசர் பல்கலைக்கழக நிர்வாகிகளையும் அம்பலப்படுத்த வேண்டியது அவசியம். மாணவிகளிடமும், மற்ற பெரிய மனிதர்களிடமும் 095241 36928 என்ற செல்பேசி எண்ணில் தான்  நிர்மலாதேவி பேசியுள்ளார். இப்போது செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள அந்த எண்ணிலிருந்து செய்யப்பட்ட அழைப்புகளை கண்டறிந்தாலே இதன் பின்னணியில் உள்ள பெரிய மனிதர்களைக் கண்டுபிடித்து விடலாம்.

 

 உயர்கல்வித் துறையில் இத்தகையக் கலாச்சாரம் பரவியிருப்பது கவலையும், வேதனையும் அளிக்கிறது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான் கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள்; அப்பிள்ளைகளை பாதுகாக்க வேண்டிய கல்லூரிகளும், கல்லூரி ஆசிரியைகளும் தங்களின் சுயநலனுக்காக அப்பாவி மாணவிகளை சீரழிக்கும் செயலில் ஈடுபட்டால் அவர்கள் மன்னிக்கப்படக் கூடாது; கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். 

 

ஏழை மாணவிகளை இழிவான செயலில் ஈடுபட வலியுறுத்தியதுடன், பெற்றோரிடம் தெரிவித்து அவர்கள் ஒப்புதலுடன் இந்த செயலில் ஈடுபடலாம் என்று கூறுவதன் மூலம், ஏழைகள் பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்று மட்டமாக சிந்திக்கும் நிர்மலாதேவி போன்றவர்கள் சமுதாயத்தின் சாபக்கேடுகள். இவர்களைப் போன்றவர்கள் கல்வித்துறையில் இருப்பதால் ஏழைப் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பாமல் இருப்பதற்கான ஆபத்து உள்ளது. இதை தடுக்க வேண்டும். 

 

மாணவிகளுக்கு உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி பாலியல் வலை வீசியது அம்பலமானதுடன், அது தொடர்பான ஒலிப்பதிவு வெளிவந்த பிறகும் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் சாதாரணமாக 15 நாட்களுக்கு பணியிடை நீக்கம் மட்டுமே செய்யப்பட்டு உள்ளார். ஆனால், காமராசர் பல்கலைக்கழக நிர்வாகிகள் உதவியுடன் அதை தம்மால் சமாளித்துவிட முடியும் என்றும் நிர்மலா தேவி கூறுகிறார். அதிகாரத்தின் உச்சந்த்தில் உள்ளவர்களின் ஆதரவின்றி  இவ்வளவு துணிச்சலுடன் பேச முடியாது. எனவே, மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய உதவிப் பேராசிரியை நிர்மலா தேவியை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதன் பின்னணியில் உள்ள பெரிய மனிதர்களை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்தக் குற்றச்சாற்று குறித்து உடனடியாக நடுவண் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சார்ந்த செய்திகள்

Next Story

மனைவி கண்முன்னே பாலியல் வன்கொடுமை; திருமணமான பெண்ணின் பரபரப்பு புகார்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
A married woman's sensational complaint on Incident happened in front of wife

கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், 28 வயது திருமணமான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரில், ‘ரஃபீக் என்பவர் அவரின் மனைவியின் கண்முன்னே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும்’ புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பெலகாவி போலீசார் தெரிவிக்கையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2013ஆம் ஆண்டில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டின் போது, ரஃபீக் என்பவர், அந்த மளிகை கடைக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கும் ரஃபீக்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தெரியவர, தனது மனைவியை கண்டித்துள்ளார். இதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றில் கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவியுடன் ஒரே வீட்டில் தங்க தொடங்கியுள்ளார். ஆனால், அங்கு, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவிக்கு முன்னால் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் குங்குமம் வைப்பதற்கு பதிலாக பர்தா அணியுமாறும், ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்யுமாறும் அந்த தம்பதியினர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் கணவரை விவாகரத்து செய்து, இஸ்லாம் மதத்துக்கு மாறி அவர்களுடன் வாழவில்லை என்றால், தனது அந்தரங்க புகைப்படங்களை குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் பரப்பி விடுவதாகவும் ரஃபீக் மிரட்டியுள்ளார்’ எனத் தெரிவித்தனர்.

அவரது புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 376, 503, கர்நாடகா மத சுதந்திர உரிமைச் சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ரஃபீக் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.