
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி, செய்தித்துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று கேள்வி நேரத்தின் போது பாமக உறுப்பினர் ஜி.கே மணி போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.
அதில், " தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை முற்றிலுமாக தடுக்கப்படும். அதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருள் விற்பதைத் தடுக்க சட்டங்களில் உரியத் திருத்தம் கொண்டு வரப்படும். தமிழகம் முழுவதும் திமுக ஆட்சி அமைந்ததும் இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகிறார்கள். தேவை ஏற்பட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது" என்றார்.