
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி வாய்ப்பு பெற்றவர் களுக்கு பணி நியமன ஆணைகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், ''தமிழ்நாடு முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி, சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். குறிப்பாக கல்வி மேம்பாட்டிற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் ரூ.44,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். பள்ளி மாணவ, மாணவிகளுக்காக 18 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த வகையில், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 3வது முறையாக இந்த வேலைவாய்ப்பு முகாம் இன்று நடத்தப்படுகிறது. இந்த முகாமில் சுமார் 28,000 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக 200 தனியார் நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர் படித்த இளைஞர்களை அரசு பணிகளில் அமர்த்துவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் ஒரு லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளிவர உள்ளன.

அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ் நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் வாயிலாக மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே அதிகளவிலான மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிப்பது தமிழ்நாட்டில்தான். மாணவ, மாணவிகள் படிக்கின்ற காலத்திலேயே தொழிற்ப யிற்சி அளிக்கும் “நான்முதல்வன் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லூரிகள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லூரிகள் மற்றும் விருப்பாட்சியில் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பழனியில் சித்தா மருத்துவக் கல்லூரி, கொடைக்கானலில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி இணையம், குஜிலியம்பாறையில் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 2 தேர்வில் இதுவரை 12 பேரும், தொகுதி 4 தேர்வில் இதுவரை 10 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இங்கு ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி அளிப்பதற்காக சென்னை அண்ணா நிறுவனத்தின் கிளை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோன்ற வாய் ப்புகளை படித்த இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, போட்டித் தேர்வுகளில் பெற்றி பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஒழுக்கம், கடின உழைப்ப இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். மாணவ, மாணவிகள் உயர் பதவிகளை அடைந்து பெற்றோருக்கும், பள்ளி, கல்லுாரிக்கும் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும்'' என்று கூறினார்.