Skip to main content

‘தொடர் விடுமுறை’ - கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
'Series Holiday' - Extra Special Buses Run

முகூர்த்தம், வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை எனத் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் வெள்ளிக் கிழமை (14/06/2024), சனிக்கிழமை (15/06/2024), ஞாயிற்றுக் கிழமை (16/06/2024) முகூர்த்தம் வார விடுமுறை மற்றும் திங்கள் கிழமை (17/06/2024) பக்ரீத் பண்டிகை எனத் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

'Series Holiday' - Extra Special Buses Run

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம்,  மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக் கிழமை) 545 சிறப்பு பேருந்துகளும், நாளை (சனிக்கிழமை) 585 சிறப்பு பேருந்துகளும் மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) 140 சிறப்பு பேருந்துகளும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 17/06/2024 (திங்கள் கிழமை) அன்று பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 705 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் வார இறுதி நாட்களை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று 15 பேருந்துகளும் நாளை 15 பேருந்துகளும் ஆக 30 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதே போன்று திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘பயணிகளின் கவனத்திற்கு’ - மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
'Attention of passengers'- change in Chennai electric train service!

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் அனைத்தும் எழும்பூரில் இருந்து நாளை (14.07.2024) இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் மின்சார ரயில் பயணிகள் நலன் கருதி சென்னை கடற்கரை முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை நாளை கட் சர்வீஸ் பேருந்துகளை இயக்க சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை (14.07.2024) தென்னக ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கும் பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடையே நடைபெற உள்ளது. இதனால் தென்னக ரயில்வே சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து  இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

'Attention of passengers'- change in Chennai electric train service!

பயணிகள் நலன் கருதி மாநகர் போக்குவரத்துக் கழகம் கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை கட் சர்வீஸ் பேருந்துகளை இயக்கப்படவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா அமலுக்கு வந்தது” - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Liquor Prohibition Amendment Bill came into force CM MK Stalin announcement

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால்  உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இனி கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் முதலிய குற்றச் செயல்களை முற்றிலும் ஒழிப்பதற்காகப் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில், ஏற்கெனவே நடைமுறையிலுள்ள 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் புதிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்படுமென முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 29-06-2024 அன்று, தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு ஆளுநர்  ஆர். என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அச்சட்ட மசோதாவிற்கு ஆளுநரால்  11-7-2024 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து இச்சட்டத்தின் கீழ் மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டு, ஏற்கெனவே தண்டிக்கப்பட்ட ஒரு நபர் மீண்டும் தண்டிக்கப்படும் போது, அந்த நபரின் சிறைவாசம் முடிந்த பின்பு அவரது தற்போதைய வசிப்பிடப் பகுதியிலிருந்து அவர் வெளியேறி வேறொரு மாவட்டத்திற்கு அல்லது வேறொரு பகுதிக்குச் சென்று வசித்திட உத்தரவு பிறப்பிக்குமாறு மதுவிலக்கு அலுவலர்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க இத்திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

மேலும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள் பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சட்டத் திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞரின் சம்மதமின்றி பிணை வழங்க இயலாத வகையில் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயம் தயாரிப்போர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 அமலுக்கு வந்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.