Sericulture Department officer arrested for taking 20,000 bribe from farmers

நாமக்கல் மாவட்டம் முத்துகாளிப்பட்டியில் பட்டு வளர்ச்சித்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு முத்துப்பாண்டி (35) என்பவர், உதவிஇயக்குநராக பணியாற்றி வருகிறார். பட்டுப்புழு வளர்ப்புக்குப் பயன்படும் முசுமுசுக்கைச் செடி பயிரிடுவதற்கான விதை கரணைகளுக்கு அரசு 1.25 லட்சம் ரூபாய் மானியம் வழங்குகிறது. இந்த மானியத்தொகை பெறுவதற்காக ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற விவசாயிஏற்கெனவே விண்ணப்பித்து இருந்தார்.

Advertisment

இந்நிலையில், அவருக்கு மானியத்தொகை ஒதுக்கீடு செய்து, மாநில இயக்குநர் அலுவலகத்தில் இருந்து காசோலை அனுப்பி வைக்கப்பட்டுஇருந்தது. இந்தத் காசோலையைப் பெறுவதற்காக ஜெகதீஸ்வரன் பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அவரிடம், உதவி இயக்குநர் முத்துப்பாண்டி, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான், காசோலையை விடுவிக்க முடியும் என்று கறாராகக் கூறியுள்ளார்.

Advertisment

இதைக்கேட்டு அதிர்ந்து போன ஜெகதீஸ்வரன், இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரைப் பதிவு செய்த காவல்துறையினர் முத்துப்பாண்டியை கையும் களவுமாகப் பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக காவல்துறையினர், ஜெகதீஸ்வரனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் தாள்களை வழங்கி, முத்துப்பாண்டியிடம் கொடுக்கும்படிசெய்தனர். பொறியில் சிக்கப் போகிறோம் என்பதை அறியாத முத்துப்பாண்டி, விவசாயியிடம் இருந்து லஞ்சப்பணத்தைப் பெற்றபோது மறைந்து இருந்த காவல்துறையினர், பாய்ந்து சென்று அவரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.