Skip to main content

ஒரே இரவில் நடந்த பயங்கரம்! - பீதியில் ஒட்டுமொத்த கிராமம்! 

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
serial theft near tiruttani

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை வட்டம், சின்னநாகபூடி கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் ஒரே இரவில் கொள்ளையர்கள் எட்டு வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். 

மேற்கண்ட அந்த கிராமத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆனந்த வடிவேல், அவரது மனைவி சாந்தி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வீட்டில் நள்ளிரவு நேரத்தில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே கொள்ளையர்கள் சென்றுள்ளனர். வீட்டில் எதுவும் கிடைக்காததால், ஆனந்த வடிவேல் தூங்கிக் கொண்டிருந்த அறை பகுதிக்குச் சென்று அவரை உருட்டுக் கட்டையால் தாக்கி மிரட்டி அவரது மனைவி கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கத் தாலி சங்கிலியைப் பறித்துக் கொண்டு அவரையும் கடுமையான முறையில் தாக்கிவிட்டுத் தப்பி ஓடி உள்ளனர்.

இதேபோல் அதே கிராமத்தில் இரண்டு கிலோமீட்டர் தள்ளி உள்ள கணபதி என்பவரது வீட்டுக்குள் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். கணபதி ஒரு கல்யாணத்திற்காக வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரது வீட்டில் 20,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த வீட்டிற்கு நேர் எதிரில் உள்ள கஜேந்திரன் என்பவர் பெங்களூரில் வசித்து வருகிறார். வாரத்தில் மூன்று முறை இந்த வீட்டிற்கு வருவார். தற்போது இவர் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்ட திருடர்கள், அவரது வீட்டிற்குள் சென்று 2 சவரன் மற்றும் ரூ. 12,000, வெள்ளி கொலுசு ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அங்கிருந்து சிறிது தொலைவில் முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் என்பவரின் வீடு உள்ளது. இவரும் வெளியூருக்குச் சென்றிருந்தார். இதனைத் தெரிந்து கொண்ட கொள்ளையர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த ரூ. 5 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். மேலும் இதேபோல், அந்தப் பகுதியில் வெளியூர்களுக்குச் சென்றிருந்தவர்களின் வீடுகளிலும் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அங்கு எதுவும் இல்லாத காரணத்தினால் கொள்ளை சம்பவம் ஏதும் நடைபெறவில்லை. 

ஒரே இரவில் 7 சவரன் நகை, 37 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இப்படி ஒரே இரவில் பல வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது, அந்த கிராமத்தில் வசிக்கும் பொது மக்களை பீதி அடையச் செய்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை சம்பவம்; தனிப்படை போலீசார் அதிரடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
avadi jewelry incident police in action

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு கடந்த 15 ஆம் தேதி (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

avadi jewelry incident police in action

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களை ஆந்திரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை போலீசார் கண்டுபிடித்திருந்தனர். 

avadi jewelry incident police in action

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி தினேஷ் குமார் மற்றும் சேட்டன்ராம் ஆகியஇருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது சென்னையில் தங்கி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

Next Story

ஆவடியில் இரட்டைக் கொலை; போலீசாரிடம் சிக்கிய செல்போன்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
aavadi siddha doctor and his wife incident Cell phone caught by the police

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள மிட்டனமல்லியில் சித்த மருத்துவர் சிவன் நாயர் என்பவரும், அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் அவரது இல்லத்திற்கு சிகிச்சைக்கு வருவதுபோல் நேற்று (28.04.2024) இரவு வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அதன்பின்னர் சித்த மருத்துவர் சிவன் நாயரையும் அவரது மனைவி பிரசன்னகுமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டனர். அப்போது இந்த இரட்டைக் கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு கொலையான மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகள் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.