அரியலூர் மாவட்டத்தைக் கதிகலங்க வைக்கும் தொடர் கொள்ளையர்கள்...

The serial robbers who are keeping the Ariyalur district

சில நாட்களாக அரியலூர் மாவட்டத்தின்பல்வேறு ஊர்களில் கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூரை ஒட்டியுள்ள வெங்கட்ரமணபுரம் கிராமத்தில் பட்டப்பகலில் பூட்டிக் கிடந்த வீட்டின் கதவைக் கோடாரியால் உடைத்துக் கொள்ளையடிக்க முயன்ற நபரை, கையும் களவுமாகப் பிடித்துத் தர்ம அடி கொடுத்து, மரத்தில் கட்டிவைத்து, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர், அந்தப் பகுதி மக்கள்.

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு செந்துறை அருகே உள்ள ராயபுரம் கிராமத்தின் ஏரிக்கரையில் உள்ள காவல் தெய்வமான மருதையன் கோவிலில் இரவு 9 மணி அளவில், கோவிலை ஒட்டியுள்ள ஏரிக்கரை பகுதிக்கு ராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளார். அப்போது கோவிலின் உள்ளே பூட்டு உடைக்கப்படும் சத்தம் கேட்டுள்ளது.

சத்தமில்லாமல், கோவிலுக்குள் சென்று அந்த இளைஞர் பார்த்தபோது, கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை அள்ளிக்கொண்டு ஒரு இளைஞர் வெளியே வருவதைப் பார்த்துள்ளார். உண்டியலைக் கொள்ளையடித்த இளைஞர் இவரைப் பார்க்க, கொள்ளையன் ஓட்டம் பிடித்தான். இதைக் கண்டு பதற்றமடைந்த ராயபுரம் இளைஞர் ‘திருடன் திருடன்’ என்று ஓங்கிக் குரல் கொடுத்துள்ளார்.

இவரது சத்தம்கேட்டு ஊர் மக்கள் திரண்டு வந்துள்ளனர். திருடன் ஓடும் திசையைஇளைஞர் கைகாட்ட ஊர் மக்கள் திருடனை துரத்த ஆரம்பித்தனர். சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று உண்டியல் கொள்ளையனைக் கையும் களவுமாகப் பிடித்து இழுத்து வந்தனர். உடனடியாகச் செந்துறை காவல்துறைக்கு ராயபுரம் மக்கள் தகவல் கொடுக்க, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் ஊர் மக்கள் உண்டியல் திருடனை ஒப்படைத்தனர்.

அவனை காவல் நிலையம் கொண்டுசென்று விசாரித்தபோது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பதும், அவர் கோயம்புத்தூர் செல்வதற்காக வந்ததாகவும், நடுவழியில் செலவுக்குப் பணம் இல்லாததால் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்ததாகவும் கூறியுள்ளார். மதுரையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல வேண்டிய ராமருக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உட்கிராமத்திற்கு வழிதவறி வந்ததாகக் கூறுவது முரண்பாடாக உள்ளது.

Ad

இதையடுத்து போலீசார் ராமரை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கரோனா பரிசோதனை செய்தனர். இதன்பிறகு, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிறையில் அடைத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தத் திருட்டுகளில் இந்த ராமர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

villupuram
இதையும் படியுங்கள்
Subscribe