/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1002_65.jpg)
கோகுல்ராஜ் சாதி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வரவேற்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் ஓமலூர் பொறியியல் கல்லூரி பட்டியலின மாணவர் கோகுல்ராஜ் இடைநிலை சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக, கொடூரமான முறையில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2015 ஜூன் 23 ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு காதலர்கள் சென்ற போது, ஒரு கும்பல் கோகுல்ராஜை கடத்தியது. பிறகு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது.சிபிசிஐடி காவலர்கள் விசாரணை செய்த வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியது.
அந்த தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பில் கொலைக்கு சாதி தான் முக்கிய காரணம் என்பது நிரூபணம் ஆகி உள்ளது என்றும், சாதி என்ற பேயின் தாக்கத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றம் முன்னிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.
இந்தியா முழுவதும், குறிப்பாகத்தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக கடுமையான தண்டனைகளை வழங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சாதி ஆணவக் கொலைகளைத்தடுக்க தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது. இந்த வழக்கில் பல்வேறு நிலைகளில் விசாரணை மேற்கொள்ள காரணமாக இருந்த மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பாராட்டுகளைத்தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)