Skip to main content

ஆக்கிரமிப்பில் உள்ள புறம்போக்கு நிலங்களை மீட்க தனிப்பிரிவு! - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பைக் கண்டறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுப்பதற்காக தனிப்பிரிவை ஏன் துவங்கக் கூடாது என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள  மச்சிநாயக்கன்பாளையம் கிராமத்தில் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டுமானங்கள் மேற்கொள்ள சார்பு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர் கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை, அரசு வழக்கறிஞர் முறையாக நடத்தவில்லை எனக் கூறி, சம்பந்தப்பட்ட அரசு வழக்கறிஞருக்கு எதிராக அளித்த புகார் மீதான விசாரணையை முடிக்கும்படி, பார் கவுன்சிலுக்கு உத்தரவிடக் கோரி, ஆக்கிரமிப்புக்கு எதிராகப் புகார் அளித்த அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவர்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

Separate Division to Reclaim Extinct Lands in Occupation! - Government of Tamil Nadu to respond!

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, அரசு வழக்கறிஞர், ஆக்கிரமிப்பாளருடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, கோவை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.

அரசு நிலங்கள், அரசு புறம் போக்கு நிலங்கள் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கப்பட  வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கில், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், வருவாய்த் துறை செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஆகியோரை, தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாகச் சேர்த்து உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகம் முழுவதும், மாவட்ட வாரியாக எத்தனை ஏக்கர் அரசு மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன? அதில் எவ்வளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன? இந்த நிலங்களை மீட்க தொடரப்பட்ட வழக்குகள் எத்தனை? அதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? அதில் எத்தனை வழக்குகளில் அரசுத்தரப்பு முறையாக வழக்கை நடத்தவில்லை? வழக்குகளை முறையாக நடத்தாத அரசுத்தரப்பு வழக்கறிஞர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என, சரமாரியாகக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

அதுபோல, தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பைக் கண்டறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுப்பதற்காக தனிப் பிரிவை ஏன் துவங்கக் கூடாது? என்பது குறித்து பதிலளிக்கும்படி அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்க, அந்த நிலங்கள் குறித்த விவரங்களை அனைத்து மாவட்ட பதிவுத்துறைக்கு ஏன் வழங்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பி, அவற்றுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

 



 

சார்ந்த செய்திகள்