செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு; அமலாக்கத்துறை பதில் தர உத்தரவு

Senthil Balaji's Bail Petition; Enforcement Department's reply order

போக்குவரத்து துறையில், சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தை நாடினர். அப்போது ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரது உடல்நிலை குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கை மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பெலா திரிவேதி, சதீஷ் சந்திர வர்மா அமர்வு முன்பு கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தனர். மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமின் மனுவை பரிசீலிக்க முடியும். மேலும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமின் மனுவை தாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனையடுத்து ஜாமின் மனுவை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பு திரும்பப் பெற்றுக் கொண்டது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில், நீதிமன்றக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை. பணப்பரிமாற்ற வழக்கில் தனக்கு எதிராக போலியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று (03-01-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படியுங்கள்
Subscribe