
கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமான வரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் நேற்று செந்தில் பாலாஜியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட முறையீடு, பிற்பகல் விசாரணைக்கு வந்தது. முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி மருத்துவமனை வளாகத்திற்கே சென்று விசாரணை நடத்தி 28 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சையில் உள்ள செந்தில் பாலாஜியிடம் நேரடியாக விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''மனித ஆணையம் தாமாக வந்தும் விசாரணை செய்யலாம். புகார்கள் வந்தாலும் விசாரணை செய்யலாம். இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் இன்று விசாரணை நடத்தினேன். அவர் அசதியுடன் காணப்பட்டதால் சிறிது நேரம் காத்திருந்து பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினேன். நெஞ்சு வலி இருப்பதால் அதிகம் பேச இயலவில்லை என செந்தில் பாலாஜி என்னிடம் கூறினார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரே கூறினார்.
அமலாக்கத்துறை தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், தன்னை தரதரவென இழுத்து சென்றதால் தனக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர் படுத்திருந்ததால் அவருடைய காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை நான் பார்க்க முடியவில்லை'' என்றார். அப்பொழுது செய்தியாளர்கள் 'அமைச்சர் என்பதால் மட்டும் மனித உரிமை ஆணையம் சார்பில் விசாரிக்கிறீர்களா?' என்றகேள்விக்கு, ''அப்படி எல்லாம் இல்ல எங்கு மனித உரிமை விதிமுறைமீறல் நடந்தாலும் நாங்கள் விசாரணை நடத்துவோம். இன்று அமைச்சரை விசாரித்ததால் ஊடகங்களில் பெரிதாக பேசுகிறீர்கள். மற்றபடி எல்லா மனித உரிமை மீறல் விவகாரங்களிலும் விசாரணை நடத்துவோம்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)