Skip to main content

“மத்திய அரசின் தொடர் அழுத்தத்தால் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது” - அமைச்சர் செந்தில்பாலாஜி  

Published on 12/09/2022 | Edited on 12/09/2022

 

senthil balaji said Electricity bill has been hiked due to continuous pressure from central government

 

மற்ற மாநிலங்களை விட குறைவான அளவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு அழுத்தத்தால் தான்  மின்கட்டணம் உயர்த்தப்பட்டது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடந்த திமுக இளைஞரணி திராவிட மாடல் பயிற்சி பாசறையில் பங்கேற்ற  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை  அமைச்சர் வி.செந்தில்பாலாஜி  செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, “ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு மின் வாரியத்தின் செயல்பாடு குறித்து தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினார். இதில் மின் வாரியத்தை மேம்படுத்தும் வழிவகை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மின்வாரியம் ரூ.1.59 லட்சம் கோடி கடனிலும், அதற்கு ஆண்டுக்கு ரூ.16,511 கோடி வட்டியும் செலுத்தும்  நிலையிலும் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் மின்வாரியம் முற்றிலும் சீரழிக்கப்பட்டு இழுத்து  மூட கூடிய நிலையில் இருந்தது. அரசு மானியமாக கடந்தாண்டு ரூ.9,000 கோடி வழங்கி மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

 

தொடர்ந்து மத்திய  அரசு, ஒழுங்குமுறை ஆணையம், மத்திய அரசின் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மின் கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கடிதங்கள் அனுப்பி வந்தன. மத்திய  அரசும் அழுத்தம் கொடுத்தது. இந்நிலையில் மத்திய அரசு மின் சந்தைக்கு ரூ.70 கோடி பாக்கி  வைத்த நிலையிலே மின்சாரம் பெற முடியாத சூழல் ஏற்பட்டது.

 

ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் மின் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது. இதன் பேரில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 3.5 கோடி நுகர்வோர்கள் உள்ள  நிலையில் நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் 7,385 பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உத்தேசிக்கப்பட்ட கட்டணத்திலிருந்து ரூ.3,217  கோடி குறைக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய ஆண்டுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வர உள்ள தொழிற்சாலைகள் கருத்தில் கொண்டு மின் உற்பத்தி திட்டங்கள், டேட்டா பேஸ் நிறுவனங்களுக்கும் மட்டும் வருகின்றன. ஆண்டுகளில் 2,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படும். புதிய மின் தேவைகளை  கருத்தில் கொண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

 

நிலக்கரி டன் 143 டாலராக உள்ளது. மின்வாரிய கடனுக்கான வட்டி 9.5 சதவீதம் முதல் 13.5 சதவீதம் வரை உள்ளது. கடன் சுமையை  குறைக்க, உற்பத்தி நிறுவனங்களின் கட்டமைப்பு, விநியோகம் ஆகியவற்றை மேம்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.30, ரூ.50 என இருந்த நிலை கட்டணங்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளன.  ஆண்டுக்கு 6 சதவீத கட்டண உயர்வு என்பது ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவு.  சமூக ஊடகங்களில் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. 

 

கடந்த 2006 -2011 ஆகிய 5 ஆண்டுகளில்  மின் தேவை 49 சவீதம் உயர்ந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் மின் தேவை 30 சதவீதம்  கூட உயரவில்லை. அந்தளவுக்கு தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.  அடுத்து வரும் 5 ஆண்டுகளில் மின் தேவை 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 9,800 மெகாவாட் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஆதாரங்களை கண்டறியும் பணி  நடைபெற்று வருகின்றன. மின் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதாந்திர மின் கணக்கெடுப்பு செயல்படுத்தப்படும்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

போர்வெல் சுவிட்சை இயக்கிய போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
A boy lose their live due to electric shock while turning on the borewell switch

திண்டிவனத்தில் போர்வெல் மோட்டார் சுவிட்சை இயக்கிய 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டிவனத்தில் கிராமம் ஒன்றில் அரசு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற தேவேந்திரன் என்ற 10 வயது சிறுவன் அங்குள்ள மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது சிறுவன் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த அவருடைய தந்தை மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  ஆனால் சிறுவன் தேவேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுவனின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கதறி அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியது. போர்வெல் சுவிட்ச் ஷாக் அடிப்பதால் மரக் குச்சியை வைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை இதை மாற்றக் கோரியும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.