Skip to main content

முன் ஜாமின் கோரி செந்தில்பாலாஜி மனு தாக்கல்!

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி முறைகேடு செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில் முன் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 

இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி வருவதாகக் கூறி  ரூ.2 கோடியே 80 லட்சம் முறைகேடு செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில், அருண்குமார் என்பவர் அளித்த புகாரில் செந்தில் பாலாஜி ஏற்கனவே முன் ஜாமின் பெற்றுள்ளார்.

senthil balaji mla chennai high court


இந்நிலையில், இன்று (31/01/2020) சென்னை மற்றும் கரூரில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட மத்திய குற்றபிரிவு காவல் துறையினர், அவருடைய  மந்தைவெளி இல்லத்திற்கு சீல் வைத்தனர். இந்த வழக்கில் தான் கைதாகக்கூடும் என்பதால், முன் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த வழக்கு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் தன்னுடைய பெயர் இல்லை என்றும் அரசியல் விரோதம் காரணமாக தன் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
 

ஏற்கனவே, 2017-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி,  எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், கடந்த 2019- ஆம் ஆண்டு இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து,  தனக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் அடுத்தகட்டமாகத் தன்னை கைது செய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

இந்நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதி சேஷசாயி முன் முறையிடப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி, முன் ஜாமின் வழக்கை பிப்ரவரி 3-ஆம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.