ADVERTISEMENT

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 8 வது முறையாக நீட்டிப்பு

03:35 PM Oct 13, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஏற்கனவே பலமுறை செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றங்களை மாறி மாறி நாடியும், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்ற குழப்பம் நீடித்தது.

அதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவில் செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அவருடைய காவல் அக்.13 ஆம் தேதி வரை மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி மீதான வழக்கு எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு மறுவிசாரணை அக்.31 ஆம் தேதிக்கு வர இருக்கிறது.

இதனிடையே புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிறையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், சிறை மருத்துவமனை மருத்துவர்கள், ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசெல்ல அறிவுறுத்தினர். அதன் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் காணொளி மூலம் சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற 20 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 8 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT