Senthil Balaji  Bail Petition ED is file a reply to ordered 

போக்குவரத்துத் துறையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். அதே சமயம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தை நாடினர். அப்போது நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்திருந்தனர்.

Advertisment

மேலும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஏற்கெனவே இரண்டுமுறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாக ஜனவரி 12 ஆம் தேதி மீண்டும் தள்ளுபடி செய்து சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.

Advertisment

இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி 2வது முறையாக ஜாமீன் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த ஜாமீன் மனுவில், “‘ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டது விசாரணையில் தான் தெரியவரும்’ என முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு. ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டதை சந்தர்ப்ப சூழ்நிலை மாறியதாக கருதுகிறோம்”எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Senthil Balaji  Bail Petition ED is file a reply to ordered 

இந்நிலையில் இந்த ஜாமீன் மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (30.01.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17 வது முறையாக ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நேற்று (29.01.2024) உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment