Sensational information released in the child case

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் உள்ள 16 வயது சிறுவனின் அண்ணன் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அந்த சிறுவனைக் கடத்திச் சென்று தாக்கிய விவகாரமானது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக இந்த சிறுவனை ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் காரில் கடத்தி செல்லப்பட்டு மிரட்டப்பட்டார் எனத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (16.06.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வேல்முருகன், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனும், பூவை ஜெகன்மூர்த்தியும் பிற்பகல் 02:30 மணி அளவில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து பூவை ஜெகன்மூர்த்தியும், ஏ.டி.ஜி.பி. ஜெயராமனும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது இந்த வழக்கு விசாரணையின் போது ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜி.பி. ஜெயராமனைக் கைது செய்யுங்கள் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனை காவல்துறையின் பாதுகாப்பில் வையுங்கள் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி ஆள் கடத்தலுக்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்திய வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனைக் காவல் சீருடையிலேயே போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (F.I.R.) வெளியாகியுள்ளது. அதில் இந்த புகார் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் திருவாளங்காடு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பி.என்.எஸ். எனப்படும் புதிய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி 159வது பிரிவு2, 329 பிரிவு 4 மற்றும் 143 ஆகிய 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் தாய் லட்சுமி என்பவர் கொடுத்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 வாகனங்களில் வந்தவர்கள் சிறுவனைக் கடத்தி சென்றதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த வாகனத்தில் வந்தவர்கள் சிறுவனைக் கடத்தி சென்றார்கள், எந்த நேரத்தில் அவர்கள் புகார் அளித்தார்கள் உள்ளிட்ட தகவல்கள் இந்த முதல் தகவல் அறிக்கையில் வெளியாகியுள்ளது.

கால் ரெக்கார்ட் எனப்படும் சி.டி.ஆர். உள்ளிட்டவற்றை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் இந்த விவகாரத்தில் பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் ஆகியோருக்கும், இந்த விவாகாரதில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் தொடர்பு உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயம் இந்த விசாரணையில் இன்னும் சிலர் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த வழக்கு விசாரணையின்போது கிடைக்கும் தகவலின் அடிப்படையில் உரியப் பிரிவுகளைச் சேர்க்க வேண்டும் என்று நீதிமன்ற அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.