
நெல்லையில்நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டசம்பவத்தில் பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை டவுன் பகுதியில் கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த ஐயப்பனும் அவரது நண்பரான கலையும் இரண்டு பைக்குகளில் நேற்று முன்தினம் இரவு டவுன் தொண்டர் சன்னதி பக்கமுள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்காக பைக்குகளை நிறுத்தினர். அதுசமயம் பின்தொடர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென்று ஒரு மர்ம பொருளை ஐயப்பன், கலை இருவர் மீதும் வீசியது. அது பயங்கர சப்தத்தால் வெடித்து புகை மூட்டம் கிளம்பியதைத் தொடர்ந்து பதற்றத்தில் அப்பகுதியில் நின்றவர்கள் ஓடியிருக்கிறார்கள். காரிலிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இறங்கிய அந்தக் கும்பல் இருவரையும் வெட்டிக் கொல்ல விரட்டியபோது தப்பியவர்கள் டவுன் போலீஸ் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொள்ள, தடயவியல் துறையினர் பயங்கர சத்தத்துடன் வெடித்த பொருளின் உதிரி பாகங்களை சேகரித்தனர். அந்தப் பொருள் கல் வெடிமருந்து, சீனிகற்கள், பால்ரஸ் குண்டுகளால் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு என தெரிய வந்தது. இந்நிலையில் உதவி கமிசனர்களான விஜயகுமார், ராஜேஸ்வரன் ஆகியுார் அப்பகுதிகளின் சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்தபோது இந்தக் கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் டவுன் பகுதியைச் சேர்ந்த பூலித்துரை, அவர்களது உறவினர்களான இசக்கிமணி, அஜித்குமார், ராஜேஷ் என விவரம் தெரியவர, அவர்களைப் பிடித்து விசாரணை செய்திருக்கிறார்கள்.

பா.ஜ.க. பிரமுகரான பூலித்துரைக்கும், ஐயப்பனுக்கும் இடையே பெண் தொடர்பாக பகைமை இருந்திருக்கிறது. வட்டிக்குப் பணம் கொடுத்து வருகிறபோது பெண் விவகாரம் விஸ்வரூபம் எடுக்க இதனால் ஆத்திரமான பூலித்துரை தரப்புகள் இரவு சாப்பிட வந்த ஐயப்பன், கலை இருவரையும் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றது தெரியவந்திருக்கிறது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கார் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். நெல்லையில் நடந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் அல்வா நகரை அதிர வைத்திருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)