
1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ராமர் பிறந்த இடம் இங்குதான் என்றும், அங்கே ராமர் கோயில் கட்ட வேண்டும் என்றும் விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங்தள் என பல்வேறு அமைப்பினர் திரண்டு சென்று பாபர் மசூதியை இடித்தனர். அதனால் பெரிய கலவரம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அது சம்பந்தமான வழக்குகள் மூலம் இந்தியா முழுவதும் பரபரப்பான சூழ்நிலையே நிலவி வந்தது.
இப்போதும், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் பிரச்சனைக்குரிய அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அங்கே ராமர் கோயில் கட்டுவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி பிரதமர் மோடி, பூமி பூஜை நடத்தினார். அதன்பிறகு ராமர் கோயில் கட்டும் பணிகள் வேகம் எடுத்துள்ளன. அதற்காக ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. உட்பட இந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ராமர் கோவில் கட்டுவதற்கான கட்டுமானச் செலவுகளுக்காக இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்கள், செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் என்று பலரிடமும் வசூலித்து வருகிறார்கள்.
அந்த அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட பி.ஜே.பி. தலைவர் கலிவரதன், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான செஞ்சி மஸ்தானிடம் சென்று ராமர் கோவில் கட்டும் பணிக்காக 11 ஆயிரம் ரூபாய் நன்கொடை பெற்றுள்ளார். இது தி.மு.க.வினர் மத்தியில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்டச் செயலாளர் மஸ்தானிடம் நாம் கேட்டோம். அதற்கு அவர், “நான் விவரம் அறிந்த வயதிலிருந்து பள்ளிவாசலுக்குத் தொழுகைக்குச் செல்வேன். என்னைத் தேடி வரும் இந்து மக்களுக்கும் அவர்கள் கோயிலுக்கும் உதவிகள் செய்து வருவதோடு, கோயில் திருப்பணிக்காக என்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறேன். அங்கு நடக்கும் குடமுழுக்கு திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருகிறேன். சாதி, மதம், இனம் கடந்து அனைத்து மக்களிடமும் பழகி வருபவன் நான். இது தொகுதி மக்கள் அனைவரும் நன்கு அறிந்த விஷயம்.
நான், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது, பொதுமக்களின் விருப்பத்திற்கிணங்க கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்கு பேரூராட்சியில் இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. அங்கு கோவில் கட்டுவதற்கும் உதவி செய்துள்ளேன். அந்தக் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் உரியடி திருவிழாவில் தவறாமல் கலந்துகொள்வேன். அதேபோல், நாங்கள் குடியிருக்கும் புதுத்தெருவில் தரையில் இருந்த பிள்ளையாருக்கு சிறிய கோயில் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று அதையும் செய்து கொடுத்துள்ளேன்.
எனது தொகுதியில் இருந்து இதுபோன்று கோயில் கட்டுவதற்கு, பள்ளிக்கூடம் கட்டுவதற்கு என பொது நோக்கத்தோடு என்னைத் தேடி வருபவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வதோடு, அந்த நிகழ்ச்சிகளுக்கும் சென்று தவறாமல் கலந்துகொள்வேன். அந்த அடிப்படையில் பி.ஜே.பி. மாவட்டத் தலைவர் கலிவரதன், ராமர் கோயில் கட்ட நிதி கேட்டு வந்தார். அவருக்கு நிதி அளித்தேன். இதில் என்ன தவறு உள்ளது. மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு அந்த இடத்தில் கோயில் கட்டுகிறார்கள். இதற்காக என்னைத் தேடி வந்து உதவி கேட்டுள்ளார். அதை செய்துள்ளேன், இதில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை.
மறைந்த எங்கள் தலைவர் கலைஞர் அனைத்து மத, இன மக்களுடனும் இணக்கமாகவே இருந்து வந்துள்ளார். ஸ்டாலினும் அதே போன்று இருந்து வருகிறார். ஸ்டாலின், எந்த மதத்தினரும் புண்படாத வகையில் நடந்துகொள்வதோடு, அனைவரையும் அரவணைத்துச் செல்கிறார். அவர்களது தேவைகளை அறிந்து உதவிகளையும் செய்து வருகிறார். திமுக அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவானது என்பது அனைவருக்கும் தெரியும். இதில் சர்ச்சையோ பரபரப்போ எதுவும் இல்லை” என்றார்.