
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர் அறிவித்தார். மேலும், குடும்ப காப்பீடு, நல வாரியம் என பல அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு அவை நடைமுறைக்கும் வந்துள்ளன.
இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக கரோனா வைரஸ் பரவல், ஊரடங்கு, தொழில் முடக்கம், வேலையின்மை, ஊதியமின்மை இப்படி மனித சமூகத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி பத்திரிகையாளர் குடும்பங்களையும் பாதித்தது. அதிலிருந்து ஒரளவு மீண்டு வர கடந்த இரண்டு வருடமும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு தலா ஒவ்வொரு சிப்பம் அரிசி மற்றும் உணவு பொருட்கள் என மூன்று முறை தொழில் முனைவோரிடம் உதவி பெற்று ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.
அது மட்டுமில்லாமல் கடந்த 6 வருடங்களாக தமிழர் திருநாளான தைப்பொங்கலை பத்திரிகையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் வேட்டி, சட்டை, சேலை என புத்தாடைகள் 25 வகையான உணவு மற்றும் பொங்கல் பொருட்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான நிகழ்ச்சி 11ந் தேதி மாலை ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் ஜீவாதங்கவேல் வரவேற்று விழாவை தொடங்கி வைத்தார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க துணை பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநிலங்களவை எம்.பி. அந்தியூர் செல்வராஜ், ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கி ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் செயல்பாட்டை பாராட்டி பேசினார்.
மேலும் அவர் விழாவில் பேசும்போது, "திமுக அரசு அமைந்தவுடன் கரோனா பரவல் இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலை மக்களை காக்க வேண்டும் என்பதை நோக்கியே இரண்டு மூன்று மாதங்கள் ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியிலேயே ஈடுபட்டது. பிறகு தான் அமைச்சர்கள் அவர்களது துறை சம்பந்தமான நிர்வாக செயல்பாட்டுக்கு வர முடிந்தது. நான் செய்தி துறை அமைச்சராக பொறுப்பேற்று பத்திரிகையாளர் அமைப்பு நடத்தும் முதல் விழாவில் கலந்து கொண்டேன் என்றால் அது தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணான எனது சொந்த ஊரில் நடக்கும் இந்த விழா தான். அது எனக்கு பெருமையாக உள்ளது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தழிழறிஞர் கலைஞர் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பத்திரிகையாளர்களாக இருந்தவர்கள்தான். தமிழகத்தில் தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பிறகு பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அடையாள அட்டை, மாவட்ட, தாலுகா, வட்ட அளவிலான செய்தியாளர்கள் அரசின் சலுகைகள் நல உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். ஏற்கனவே ஒரு வழக்கு தொடர்பாக நீதிமன்ற உத்தரவு உள்ளது. அவையெல்லாம் பரிசீலித்து உழைக்கும் பத்திரிகையாளர்கள் பயன் பெரும் வகையில் தி.மு.க. அரசின் செயல்பாடு அமையும்.
பத்திரிகையாளர்களுக்காக நலவாரியம் அமைக்கப்பட்டு, அதில் அனுபவம் வாய்ந்த மூத்த செய்தியாளர்களை உறுப்பினராக நியமித்து பத்திரிகையாளர்களுக்கான அரசின் அங்கீகார அட்டை, நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்களின் குறைகளை நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிந்தவர். உங்களது கோரிக்கைகள் அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று, நிறைவேற்ற நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என நம்பிக்கை கொடுத்தார் அமைச்சர் சாமிநாதன்.
இவ்விழாவில் சங்க தலைவர் ரமேஷ், பொருளாளர் ரவிச்சந்திரன் உட்பட மாவட்டம் முழுக்க உள்ள 150க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கலந்து கொண்டு பொங்கல் பொருட்களை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.