Senior Advocate B. Comments on Wilson removed  says Justice R Subramanian

அண்மையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் மூத்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கடுமையாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது, சக வழக்கறிஞர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

Advertisment

அகில இந்திய பார்கவுன்சில், கர்நாடக பார்கவுன்சில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு உட்பட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும், வழக்கறிஞர்களை கண்ணியக்குறைவாக நடத்துவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வரை கடிதம் அனுப்பியிருந்தனர். இது குறித்தான நெறிமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

Advertisment

இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் வழக்கிலிருந்து தனி நீதிபதியை விலகுமாறு கேட்கவில்லை என்றும், மூத்த வழக்கறிஞர் மீதான கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும், நீதிமன்ற விசாரணை காட்சிகளைப் பதிவு செய்து வெளியிட்டவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், விக்டோரியாகவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டி.என்.பி.சி. சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் ஆஜராகி, இந்த வழக்கிலிருந்து நீதிபதி விலக வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் கேட்கவில்லை என்றும், நீதிமன்றத்தின் மேல் உரிய மரியாதை வைத்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். மனுதாரர்கள் சொல்வதையே நீதிமன்றத்தில் கூற முடியும் என்றும் தெரிவித்தார்.

Advertisment

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆர்.சுப்ரமணியன், நீதிமன்ற காட்சிகள் வெளியானது குறித்து சைபர் கமிட்டி விசாரணை நடைபெற்று வருவதாகவும், சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரித்து வருவதாகத் தெரிவித்தார். யார் பதிவு செய்தார்கள் என்பதை ஓரிரு நாட்களில் கண்டுபிடித்து விடுவோம் எனக் குறிப்பிட்டார். மேலும் அந்த வீடியோ காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் குறித்த கருத்துகள் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை வேறு நீதிபதி முன்பு பட்டியலிட, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.