Sending migrant workers would freeze factories-TMC

Advertisment

தமிழகம் முழுக்க உள்ள லட்சக்கணக்கான வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலத்திற்கே திரும்பிசெல்கிறார்கள். இதில்தமிழக அரசின் செயல்பாடு தவறான நிலைப்பாடாக கருதப்படுவதாக அ.தி.மு.க.வின் தோழமை கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கூறியுள்ளது. அக்கட்சியின் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா விடுத்துள்ள அறிக்கையில்,

"இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரசின் தாக்கம் குறையாததால் 4 வது கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்துக்கு செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி தொழிற்சாலை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து ஊரடங்கு ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அவர்களுக்கு தேவையான உணவு தங்குமிட வசதிகள் செய்து கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில் அவர்கள் தொழிற்சாலை இயங்க ஆரம்பித்து வேலையை தொடரலாம் என நினைக்கும்போது, மாநில அரசின் செயல்பாடு தொழிற்சாலைகளை முடக்குவதுபோல் அமைந்துள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விருப்பப்பட்டு அவரவர்கள் சொந்த ஊருக்கு செல்வதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் விருப்பத்திற்கு மாறாக அவர்களை வற்புறுத்தி அவரவர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கும் இந்த முடிவை தமிழக அரசின் உத்தரவின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வற்புறுத்தி அழைத்து அவர்களை அனுப்பி வைப்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

Advertisment

nakkheeran app

மாறாக தமிழக அரசு 50 நாட்களுக்கு பிறகு இப்போதுதான் தொழில் துறை இயங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் அனைத்து தொழிலாளர்களையும் வற்புறுத்தி அவரவர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைத்துவிட்டால், தொழில்துறை எவ்வாறு சிறப்பாக இயங்கும். பொருளாதாரம் எப்படி மேம்படும் எனவே இத்தகைய நிலையை தமிழக அரசு கைவிடும்படி தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக மாநில அரசை கேட்டுக்கொள்கிறோம்." என கூறியிருக்கிறார்.