
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிங்கவரம் சாலையில் உள்ளது மாதா கோவில் தெரு. இந்த தெருவில் செல்ஃபோன் டவர் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான முயற்சியில் கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. ஆனால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
காரணம், செல்ஃபோன் டவர் அமைப்பதால் உண்டாகும் கதிர்வீச்சின் காரணமாக சிட்டுக்குருவி பறவை இனமே அழிந்து போய்விட்டது. மேலும் இந்த செல்ஃபோன் டவர் அமைந்துள்ள பகுதிகளில் பலருக்கும் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றது. அதற்குக் காரணம் செல்ஃபோன் டவரில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுதான். இப்படிப் பல்வேறு காரணங்களைக் கூறி செல்ஃபோன் டவர் அமைப்பதைக் கைவிடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் செல்ஃபோன் டவர் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். அப்படியும் செல்ஃபோன் டவர் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி நேற்று செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கைக்குழந்தைகளுடன் பெண்கள் சிலர் தீக்குளிக்க முயன்றனர். அதில், மும்தாஜ் யாஸ்மின், ஷம் சாத் ஹாஜிமா சய்தானி, ஷகுனா ஆகியோர் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டனர்.
இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி வட்டாட்சியரிடம் அழைத்துச் சென்றனர். பின்னர் வட்டாட்சியர் ராஜன் இடம் செல்ஃபோன் டவர் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் வைத்தனர். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இடத்தில் தற்போது டவர் அமைப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து பொதுமக்கள் தீக்குளிப்பு போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்துசென்றனர். இந்தச் சம்பவம் செஞ்சி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)