Semester Exam! Engineering students against Anna University!

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான இந்த வருடத்தின் செமஸ்டர் தேர்வுகளை, நேரடி தேர்வுகளாக டிசம்பர் மாதம் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

Advertisment

கரோனா பெருந்தொற்று பரவலால் பள்ளி, கல்லூரிகள் முழுமையாக இயங்கவில்லை. கரோனாவின் தாக்கம் சில மாதங்களாக குறைந்துள்ள நிலையில், கரோனா கட்டுப்பாடுகளிலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அமலில் இருக்கிறது.

Advertisment

இருப்பினும், பொறியியல் கல்லூரிகள் நேரடி வகுப்புகளை நடத்தாமல் இதுநாள்வரை ஆன்லைன் வகுப்புகளையே நடத்திவருகின்றன. இப்போதுவரை நேரடி வகுப்புகள் துவக்கப்படவில்லை. இந்த நிலையில், செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக (ஆஃப்லைன்) நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருப்பதால் மாணவர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், “பொறியியல் பாடங்கள் அனைத்தும் இதுவரை ஆன்லைன் வகுப்புகள் வழியாகத்தான் நடத்தப்பட்டுவருகிறது. ஆன்லைனிலேயே பாடங்கள் நடத்தப்பட்டதால், முந்தைய வழிமுறைகளின்படியே இந்த செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனிலேயே நடத்துவதுதான் சரியாகும். நேரடி வகுப்புகளை நடத்தாமல் நேரடி தேர்வுகளை நடத்த அறிவித்திருப்பது எங்களுக்கு கவலையாக இருக்கிறது.

அதனால், நடப்பு செமஸ்டருக்கான வகுப்புகளை ஆன்லைனில் நடத்தியிருப்பதால் இந்த செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த வேண்டும். அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகளை நேரடி வகுப்புகளாக அண்ணா பல்கலைக்கழகமும் அதன் கட்டுப்பாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளும் நடத்தட்டும். அதன்பிறகு நேரடி தேர்வுகளையும் நடத்தட்டும். இதனைப் பரிசீலிக்காமல், அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ள அறிவிப்பு எங்களைக் கவலையடைய செய்கிறது. இந்த விசயத்தில் தமிழக அரசு தலையிட்டு மாணவர்களின் உணர்வுகளுக்கேற்ப ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்புக்கு எதிராக மதுரையில் மாணவர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.