/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/selvaperunthagai-art-our_6.jpg)
முன்னாள் பிரதமர் நேருவை கொச்சைப்படுத்தி பேசியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கையில், “சமூக ஊடகங்களில் ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ என்ற பெயரில், பரத் பாலாஜி என்பவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை மிக மிக இழிவாக கீழ்த்தரமான முறையில் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார்.
இந்தியாவின் பிரதமராக 17 ஆண்டுகாலம் பதவி வகித்து, நவ இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்பட்டவரும், உலக நாடுகளில் உள்ள அனைத்து தலைவர்களாலும் போற்றி பாராட்டப்பட்ட நேருவை இத்தகைய முறையில் இழிவாக பேசுவதை எவரும் அனுமதிக்க முடியாது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். நேருவை தரம் தாழ்ந்த நரகல் நடையில் இழிவாக பேசிய பரத் பாலாஜியை காவல்துறையினர் கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவின் மகத்தான மனிதராக கருதப்பட்ட நேருவை பழித்து பேசியவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய அவதூறு பேச்சுக்கள் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினரின் மனதை புண்படுத்தியதோடு, கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இதுபோன்ற நாகரீகமற்ற பேச்சுக்கள் சமூக ஊடகங்களில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு காவல்துறையை சேர்ந்த சைபர் கிரைம் பிரிவினருக்கு இருப்பதை வலியுறுத்த விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)