
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தரணம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகமது ரபீக். குடியாத்தம் காத்தாடி குப்பத்தில் இரும்பு பீரோக்கள் தயார் செய்யும் சிறிய தொழிற்சாலை வைத்து நடத்திவருகிறார். இவர், கடந்த 20ஆம் தேதி வேலை முடிந்து இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். 21ஆம் தேதி காலை கடையைத் திறக்க ரபீக் வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த வெல்டிங் மிஷின் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரபீக், இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் முகமது ரபீக் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வெல்டிங் மிஷின் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாக வாட்ஸ் அப்பில் சில போட்டோக்கள் சில உள்ளூர் குழுக்களில் வந்துள்ளது.
இதனைப்பார்த்த சிலர் இது குறித்து முகமது ரபீக்கிடம் ‘உன் கடை பொருட்கள் போல் உள்ளது, கடையின் பெயர் எழுதப்பட்டுள்ளது’ என தகவல் கூறி அந்த புகைப்படத்தை அனுப்பியுள்ளனர். அது அவரது கடையில் திருட்டுபோன பொருட்கள். திருட்டுப்பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாக இரண்டு வாலிபர்கள் பதிவிட்டு இருந்துள்ளனர். உடனே இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார் முகமது ரபீக், அதனை தொடர்ந்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்- இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் இருவரை அழைத்துவந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
வாட்ஸ் அப்பில் பதிவிட்டவர்கள் முகமது ரபீக் கடையில் சில தினங்கள் மட்டுமே வேலை செய்துவிட்டு நின்றுவிட்ட குடியாத்தம் தரணம் பேட்டை காசிம் சாகிப் தெருவைச் சேர்ந்த 24 வயதான முஜ்ஜமில், கோபாலபுரம் செக்குமேடு பகுதியைச் சேர்ந்த 24 வயதான அசீம் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் திருடிய பொருட்களை மீட்ட போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.