Skip to main content

கள்ள மது பாட்டில்கள் விற்பனை! களத்தில் இறங்கிய பொதுமக்கள்! 

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

Selling counterfeit wine bottles! Public on the field!

 

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் இரு மதுக்கடைகள் இயங்கிவந்தன. அவை இரண்டும், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் முக்கியச் சாலையில் இருந்தன. இதனால், அந்தச் சாலையில் செல்லும் மக்களும், மாணவர்களும், பெண்களும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிவந்தனர். 

 

அதன் காரணமாக, அந்த இரண்டு மதுக் கடைகளையும் மூட வேண்டும் என பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ், அம்மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கீழக்கரையில் மதுக்கடைகள் மூடப்பட்டன. 

 

கீழக்கரையில் மதுக்கடைகள் இல்லாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிலர் கள்ளத்தனமாக வேறு இடங்களிலிருந்து மதுபானங்களை வாங்கிவந்து கீழக்கரையில் விற்றுவருகின்றனர். இதனால், மீண்டும் கீழக்கரையில் மது குடிப்போரின் தொல்லைகள் அதிகமாகிவந்தன. 

 

இந்நிலையில், கீழக்கரை இஸ்லாமிய பள்ளி தாளாளர் முகைதீன் இபுறாஹீம், முன்னாள் கவுன்சிலர்கள் சாகுல் அமீது, மணிகண்டன், கஜேந்திரன், மகேஷ் பாதுஷா, நூறுள் ஜமான் ஆகியோர் தலைமையில் ஊர் முக்கிய பிரமுகர்களை அழைத்து நேரடியாக இன்று கீழக்கரை புதிய பஸ் நிலையம் அருகே சென்று அங்கு கள்ளத்தனமாக மது விற்பனை செய்துவந்தவர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், விற்பனை செய்து கொண்டிருந்த மது பாட்டில்களையும் காவல்துறையிடம்  ஒப்படைத்தனர்.

 

பொதுநல நோக்குடன் தைரியமாக களத்தில் இறங்கிய கீழக்கரை பொதுமக்கள் மது பாட்டில்களுடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்து மீண்டும் அப்பகுதியில் விற்பனை நடைபெற்றால் போராட்டம் நடத்தப்படும் என அங்கிருந்த எஸ்.எஸ்.ஐ. தேவேந்திரனிடம் தெரிவித்தனர்.

 

இதுபற்றி நாம் கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷிடம் கேட்டபோது, “விசாரணை நடைபெற்று வருகிறது. யார் மது பெற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும். அங்கு தினந்தோறும் காவல்துறை அதிகாரிகளை அனுப்பி கண்காணிக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்