Advertisment

செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் பறிமுதல்!

 Seizure of artificially ripened fruits!

கோடைகாலம் தொடங்கியபோதே மாம்பழ சீசன் தொடங்கியது. இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதுமே மாம்பழ விளைச்சல் மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் விற்பனைக்கான வரத்து போதிய அளவில் இல்லை என்பதால் இந்த ஆண்டு மாம்பழங்களின் விலை கணிசமாகவே உயர்ந்துள்ளது, இது மாம்பழ விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத்தந்துள்ளன.

Advertisment

அதே நேரத்தில் விவசாயிகளிடமிருந்து மாம்பழம், மாங்காய்களை வாங்கும் விற்பனையாளர்கள் அதனை பழுக்க வைப்பதற்காக ரசாயன பொடிகளை தூவி பழுக்க வைக்கின்றனர். இது உடல் நலத்திற்கு தீங்கு என சுகாதாரத்துறை உணவு கட்டுப்பாட்டு துறை எச்சரித்தாலும் பணமே குறிக்கோள் என செயல்படும் வியாபாரிகள் பலர் அதனை கண்டு கொள்வதில்லை என்றுகுற்றம்சாட்டப்படுகிறது.

Advertisment

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மாம்பழம் விற்பனைக்கு வருகின்றன. திருவண்ணாமலைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்றனர், அவர்கள் இங்கிருந்து வீட்டுக்கு ஏதாவது வாங்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக மாம்பழம், வாழைப்பழம் உட்பட ஏதாவது ஒரு பழம், தின்பண்டங்களை வாங்கிச் செல்கின்றனர். அப்படி வாங்கிச் செல்வது தரமற்றதாகவும் கெமிக்கல் பயன்படுத்துவதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையிலிருந்து வாங்கிச் செல்லப்படும் மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றில் ரசாயனம் தூவி பழுக்க வைக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று திடீரென பழக்கடைகளில் ஆய்வு செய்தனர்.

Seizure of artificially ripened fruits!

மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற சோதனையில் தேரடி வீதி, திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பழக் கடைகள், மண்டிகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பழக்கடைகளில் ரசாயன பொருட்களை தெளித்தும், ரசாயன பொருட்களை சிறுசிறு கட்டிகளாக வைத்தும் செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்படுவது உறுதியானது.

கடைகளில் இருந்து சுமார் 500 கிலோ மாம்பழம் மற்றும் 500 கிலோ வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். இந்த தவறுகளை செய்த பழக்கடை உரிமையாளர்களில் மீது அபராதமும் விதிக்கப்படும் என்று உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபோல் திருவண்ணாமலையில் உள்ள ஹோட்டல்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை வைக்கின்றனர். இதுக்குறித்து பல தரப்பிலிருந்து உணவுத்துறைக்கு கோரிக்கை வைத்தும் அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது.

fruits thiruvannamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe