திருச்சி தென்னூர் பகுதியில் கலப்பட தேயிலை தூள் விற்பனை செய்வதாக பொதுமக்களிடமிருந்து வந்த புகாரை அடுத்து, அப்பகுதியில் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு குடியிருப்பில் கலப்பட தேயிலை தூள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 72 கிலோ கலப்பட தேயிலையைப் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறையினர், 5 சட்டப்பூர்வ உணவு மாதிரிகளைஎடுத்து தமிழ்நாடு அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில், “திருச்சி மாவட்டத்தில் இதுபோன்ற கலப்படத் தேயிலைத் தூள், கலப்பட உணவுப் பொருள்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.