Skip to main content

நாம் தமிழர் கட்சியினருக்கு சீமான் திடீர் எச்சரிக்கை!

Published on 28/07/2018 | Edited on 28/07/2018


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இணையதளங்களில் எதிர்மறை கருத்துகளை நாம் தமிழர் கட்சியினர் பதிவிடக்கூடாது. அவ்வாறு பதிவிட்டால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கலைஞரின் உடல்நிலை குறித்து எதிர்மறையான செய்திகளை நாம் தமிழர் கட்சியினரின் பெயரில் இயங்கும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள் என்ற செய்தியறிந்து கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கருணாநிதியின் அரசியல் முடிவோடும், திமுகவின் கொள்கை கோட்பாடுகளோடும் மாற்றுக் கருத்து உண்டு என்பதில் ஐயமில்லை என தெரிவித்துள்ள சீமான், ஆனால் அவரது உடல்நிலை நலிவுற்ற இந்த நேரத்தில் அதுகுறித்து விமர்சிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். இது அறமோ, அரசியல் பண்பாடோ அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனை தலைவராக ஏற்று அரசியல் மாண்பை கடைபிடிக்கிற நாம் எந்த வகையிலும் பிறர் மனம் வருந்தும் தனிப்பட்ட தாக்குதல்கள் உடைய பதிவுகளை இடுவதோ, பரப்புவதோ கூடாது எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மீறி செயல்படுபவர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் என்றும் சீமான் எச்சரித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தேறி மீண்டும் அரசியல் தளத்திலே பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தையும் சீமான் தெரிவித்துள்ளார். அதேசமயம் இணையத்தில் இயங்கும் நாம் தமிழர் கட்சியினர் மிகுந்த கண்ணியத்தோடும், அரசியல் நாகரீக மாண்புகளோடும் செயல்பட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சார்ந்த செய்திகள்