Skip to main content

சினிமா ஒரு சாக்கடை என பேசியே தமிழ் பெண்களை தடுத்துவிட்டார்கள் - சீமான் பேச்சு

Published on 31/01/2019 | Edited on 31/01/2019
seeman



வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது  மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. 
 

இந்த விழாவில் சீமான் பேசும்போது, “பொதுவாகவே காவலர்கள் பற்றிய ஒரு வெறுப்பு அனைவருமே இருக்கிறது. காவல்துறையில் சில குறைகள் இருக்கிறது உண்மைதான். குற்றவாளிகளை தண்டிப்பதைவிட, குற்றம் நடக்காமல்  பார்த்துக்கொள்வது தான் காவல்துறையின்  கடமையாக இருக்க வேண்டும். அதேசமயம் அதிகப்படியான பணிச்சுமை அவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது அவர்களுக்கு பண்டிகை விழா என எந்த கொண்டாட்டங்களும் கிடையாது. 
 

ஆண் காவலர்களுக்கு நிறைய சிரமங்கள் இருந்தாலும் அவர்களை விட பெண்களுக்கு அதிகம் சங்கடங்கள் இருக்கவே செய்கின்றன. அதனால்தான் ஆண் காவலர்களுக்கு 8 மணி நேரம், பெண் காவலர்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே பணி செய்ய ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகிறோம். 
 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது அங்கு இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது அவர்களிடம் பேசி போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்காக நானும் அமீர் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தோம். அப்போது அங்கே பாதுகாப்புக்காக வந்திருந்த பெண் காவலர்கள் எங்களைப் பார்த்து அழுதபடி நாங்கள் வீட்டை விட்டு வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது மாற்றுத் துணி கூட கொண்டு வரவில்லை. எங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதுகூட எங்களுக்கு தெரியவில்லை. தயவுசெய்து இந்த போராட்டத்தை சீக்கிரம் முடியுங்கள். அப்போதுதான் நாங்கள் வீடு திரும்ப முடியும் என கெஞ்சியதை பார்த்ததும் பெண் காவலர்களின் நிலை என்னவென்று தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. 
 

காவலர்களுக்கு பணிச்சுமையைக் குறைத்து, நல்ல ஊதியம், நல்ல வீடு என அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும்போதுதான் அவர்களால் நேர்மையாக பணியாற்ற முடியும். தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி மூலம்தான் லஞ்சம் ஊழலை ஒழித்து நல்லாட்சி கொடுக்க முடியும். 
 

இந்த படம் பார்த்துவிட்டு நீங்கள் சாலையில் போகும்போது பாதுகாவலுக்கு நிற்கும் பெண் போலீசாரை பார்த்தால் உங்களுக்கு அவர்கள் மீது மிகப்பெரிய மரியாதை ஏற்படும்.. ஜெகன் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு இந்த படம் பார்த்துவிட்டு அது இன்னும் அதிகமானது. இவ்வளவு நல்ல கதைகளை வைத்து இருக்கும்போது, எதற்காக என் ஆளோட செருப்ப காணோம் என்கிற படங்களை எடுக்கிறாய் என்று நான் திட்டியது உண்மைதான்.

 

இந்த படத்தை சிறந்த சமூக பார்வையாளனாக பெண் காவலர்களை பற்றி ஜெகன் உருவாக்கி இருப்பதும் அதை சுரேஷ் காமாட்சி படமாக இயக்கி இருப்பதும் எனக்கு பெருமையாக இருக்கிறது.. இந்த படத்தில் பிரியங்கா நடிக்காமல் ஒரு பெரிய நடிகை நடித்திருந்தால் தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் மிகப்பெரிய மார்கெட் இந்த படத்திற்கு கிடைத்திருக்கும்.. ஆனால் படத்தில் அந்த கதாபாத்திரத்தை பார்க்கும்போது அந்த நடிகை தான் தெரிவார் ஆனால் அவ்வளவாக அறிமுகம் இல்லாத பிரியங்கா நடித்திருப்பதால் தான் அந்த கதாபாத்திரம் நம் மனதில் ஆழமாகப் பதிகிறது அதுதான் இந்த படத்திற்கு பலம்.

 

சினிமா ஒரு சாக்கடை என பேசிப்பேசியே தமிழ் பெண்கள் சினிமாவுக்கு வருவதை தடுத்துவிட்டார்கள்.. சீரியலில் நடிக்க வரும் பெண்கள் கூட சினிமா பக்கம் வருவதற்கு யோசிக்கிற மாதிரி சூழலை உருவாக்கி விட்டார்கள்.. பிரியங்காவை போன்ற பெண்களைப் பார்த்து இனி பலரும் சினிமாவிற்கு வர ஆரம்பிப்பார்கள்.

 

இன்று தொலைக்காட்சி விவாதங்களில் பார்த்தால் அதில் பேசும் அனைவரும் ரஜினி பற்றி பேசும்போது, தலைவருடன் நடித்தேன்.. தலைவருடன் பேசினேன்.. தலைவருக்காக கதையை தயார் செய்தேன் என அவரை எப்போதுமே தலைவர் என்றுதான் கூறுகிறார்கள்.. அவர் தலைவர் என்றால் பிரபாகரன், காமராஜர், கக்கன் போன்றவர்களெல்லாம் யார்..? சினிமாவில் நடிப்பதால் மட்டுமே தலைவன் ஆக முடியாது அவர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே” என கூறினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்