சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அஜித் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த உத்தரவின் படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் தான் கோவில் காவலாளி அஜித்குமார் காவல் துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு கட்சியினரும் மடப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அஜித்குமார் வீட்டிற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (09.07.2025) நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மாவட்ட காவல்துறை அதிகாரியைத் தாண்டி நேரடியாகச் சிறப்புக் காவல் படைக்கு உத்தரவு பிறப்பித்தவர் யார்?. அதானே கேள்வி. அதைக் கண்டுபிடிக்க முடியாதா?. சி.பி.ஐ. விசாரணையைத் தமிழ்நாடு அரசே கேட்கிறது. முதல்வரே சி.பி.ஐ.விசாரணை வேண்டும் எனச் சொல்கிறார். காவல்துறை யாருடைய தலைமையின் கீழே இயங்குகிறது யாருடைய இலாகா?. யாருடைய துறை?. தமிழக முதலமைச்சருடைய துறைதான் காவல்துறை உளவுத்துறை, சி.பி.சி.ஐ.டி. என்கிற சிறப்பு விசாரணை பிரிவு எல்லாம்.
காவல் துறையின் மேல் நம்பிக்கை இல்லையா?. எதற்கு சி.பி.ஐ. விசாரணை கேட்கிறீர்கள்?. மத்திய புலனாய்வு விசாரணை எதற்குக் கேட்கிறீர்கள்?. மாநில சுயாட்சி, மாநில உரிமை எல்லாம் பேசுகிறீர்கள். காவல்துறை மேல் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா. காவல் துறையினர் சரியாக விசாரிக்க வில்லையா?. உளவுத்துறை சரியாக இயங்கவில்லையா?. அது சரி இல்லையா?. உங்கள் கீழ் உள்ள சி.பி.சி.ஐ.டி. என்ற காவல் படைப்பிரிவு சரி இல்லையா?. அதனை நீங்கள் ஒத்துக்குறீங்களா?. என்னுடைய காவல்துறை தோல்வி அடைந்துள்ளது என்று ஒத்துக்கொண்டால் நீங்கள் தகுதி இழக்குறீங்களா?. அந்த துறையை நிர்வகிக்கும் தகுதியை இழக்குறீங்களா?. அப்படி என்றால் பதவி விலகுவீர்களா?. குற்றம் வெளிப்படையாகத் தெரிகிறது. குற்றம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை என்றால் தான் விசாரணை.
5 பேர் வந்து கூட்டிட்டு போய் அஜித்குமாரை அடித்துக் கொன்றுள்ளனர். குற்றம் தெரிகிறது. குற்றச்சாட்டு என்பது நகையை எடுத்துட்டாருங்கிறது தான். போலீசாரால் நகையை மீட்க முடியவில்லை. அப்படி என்றால் அஜித்குமார் நகையை எடுக்கவில்லை. பொய்யான குற்றச்சாட்டுக்கு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். குற்றம் வெளிப்படையாகத் தெரிகிறது. காவலர்கள் அடித்திருக்கிறார்கள். அதனால் அஜித்குமார் உயிரிழந்தார் என்று தெரிகிறது. அஜித்குமாரை அடிக்க உத்தரவு பிறப்பித்தவர் யார்?. இந்த உத்தரவு பிறப்பித்தவர் மீது தானே நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் விசாரிக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது?. இதில் என்ன நடந்தது என்று யாருக்குத் தெரியவில்லை?. நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்துவதற்கு ஏமாற்றுகிறார்.
காவல்துறை விசாரணையில் இருந்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுகிறோம் என்பதே ஏமாத்துறதுக்கு தானே ஒழிய. இதுவரை சி.பி.ஐ. விசாரணையில் நிரூபிக்கப்பட்ட நீதி காப்பாற்றப்பட்ட நீதி ஏதாவது இருக்கிறதா?. இதுவரை எத்தனை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. அதனால் என்ன நன்மை நடந்துள்ளது. நீங்கள் தான் சொல்கிறீர்கள் எல்லா உரிமையையும் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசு பறித்து வைத்துக்கொண்டது” எனத் தெரிவித்தார்.