
திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் இளைஞர்கள் இரண்டு பேர் குளிக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, அவர்களை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களிடமிருந்து செல்போன்களைப் பிடுங்கி பயங்கரமான ஆயுதங்களுடன் தாக்கியுள்ளனர். பின்னர் இரு இளைஞர்களையும் சாதி கேட்டு, அவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தவுடன் மீண்டும் அவர்களை சரமாரி தாக்குதல் நடத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்துக் கொடூரமாக நடந்துகொண்டுள்ளனர். மேலும், மாலை முதல் இரவு வரை இருவரையும் வைத்து அந்த கும்பல் சித்திரவதை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இருவரையும் அந்த கும்பலிடம் இருந்து மீட்ட பொதுமக்கள், பாதிக்கப்பட்ட இளைஞர்களை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 6 பேரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், “திருநெல்வேலி மாவட்டத்தில் தான் சாதி தாக்கம் அதிகளவில் இருக்கிறது. சமீபத்தில் கூட பள்ளி மாணவரின் வீட்டில் புகுந்து வெட்டினார்கள். இதெல்லாம் நச்சு சிந்தனைகள். இதையெல்லாம் கடும் சட்டங்கள் மூலமாக ஒழிக்க வேண்டும். சாதிய எண்ணமே எழக்கூடாது. பள்ளிக்கூடத்திலேயே சாதி இருக்கிறது. ஏன் இப்படி நடக்கிறது என்று சனாதன ஒழிப்புவாதிகள், சமூகநீதி காவலர்களிடம் தான் கேட்க வேண்டும்.
மற்ற மாநிலங்களில் பெயருக்கு பின்னால் சாதியின் பெயரை வைத்திருப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தான் சாதியின் பெயரை போடமாட்டார்கள். அதற்கு பதிலாக சாதிக்கும், மதத்துக்கும் கட்சி வைத்திருப்பார்கள். மற்ற மாநிலத்தவர்கள் எல்லாம், பிரிந்து வாழ்வார்கள். ஆனால் ஒன்றாக செயல்படுவார்கள். தமிழ்நாட்டு மக்கள் சேர்ந்து வாழ்வார்கள். ஆனால், பிரிந்து செயல்படுவார்கள். இது தான் வேறுபாடு. வரவிருக்கிற தலைமுறைக்கு இந்த சாதிய நஞ்சுகள் வராத படி வளர்த்து விடவேண்டும்” என்று கூறினார்.