Advertisment

‘தை மகளே வருக! தமிழர் நலம் பெருக!’ - சீமான் பொங்கல் வாழ்த்து

Seeman Pongal greetings

Advertisment

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பொங்கல் வாழ்த்துகளைத்தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தை மகளே வருக! தமிழர் நலம் பெருக! உலகின் மூத்த மாந்தரினமாம் தமிழ்ப் பேரினத்தின் தேசியத் திருநாளாம் பொங்கல் விழா இன்று.

வாசலில் வண்ண மலர் கோலமிட்டு, புதுப்பானையில் புத்தரிசி, வெல்லமிட்டு, செங்கரும்பு, இஞ்சி - மஞ்சளுடன் தித்திக்கும் பொங்கல் வைத்து, உயிர்கள் வாழ உணவளிக்கும் இயற்கைக்கும், காடு திருத்தி, கழனியாக்கி, நீர்ப்பாய்ச்சி, உழுது, விதைத்து வேளாண்மை புரியும் உழவர் பெருங்குடி மக்களுக்கும், அவர்களுக்கு உற்ற துணையாய் நின்ற ஆடு, மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் பெருவிழா.

Advertisment

உலகில் வாழும் எல்லா மக்களும் கேளிக்கைகளையே தங்களின் பெருவிழாவாகக்கொண்டாடிக் கொண்டிருக்க, வேளாண்மையையே பண்பாடாகக் கொண்டிருக்கும் தொல் தமிழ்ப் பேரினம், சூரியன் இல்லாது பூமியும் இல்லை; பூமியில் எதுவொன்றும் இல்லை என்பதை அறிந்தே உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் மூலமாக உள்ள ஆதிபகவன் சூரியனை வணங்கி, உழவுக்கும், உழவர்க்கும் நன்றி செலுத்தும் திருநாளையே தொன்றுதொட்ட மரபுத் திருவிழாவாக, தேசியப் பெருவிழாவாகக் கொண்டாடுவது அதன் பண்பாட்டுச் செழுமையைப் பறைசாற்றுகிறது.

வேளாண்மைக்கு உரிய நீர் கிடைக்காமலும், விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமலும், வேளாண் நிலங்கள் பறிக்கப்படுவதென அல்லலுறும் சூழல்கள் ஆயிரம் எதிர்கொண்ட பின்னும் ‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை’என்ற தமிழ்மறை கூறும் முதுமொழிக்கேற்ப உழவினைக் கைவிடாது காத்து வரும் விவசாயிகளின் பெருவாழ்வு இனியேனும் சிறக்க பிறக்கும் தைத்திங்கள் முதல் நாளில் புதுப்பொங்கல் பொங்கட்டும். மழை வெள்ளப் பாதிப்புகள் சூழ்ந்த பெருந்துயரிலிருந்து தமிழ் மக்கள் முழுமையாக மீண்டு வந்து தங்கள் வாழ்வில் சூழ்ந்த வறுமை நீங்கி வளமை பொங்க தைப்பொங்கல் பொங்கட்டும்!

அநீதிக்கு எதிரான,அடக்குமுறை, ஒடுக்குமுறைகளுக்கு எதிரான, சாதி - மத ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான, பசி - பஞ்சம், பட்டினி, இயற்கை வளச் சுரண்டல், பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்ற சமூகத் தீமைகள் யாவும் நீங்க பொங்கட்டும் புரட்சிப் பொங்கல். அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கட்டும் மகிழ்ச்சிப் பொங்கல். உலகமெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசிய திருநாளாம் பொங்கல் விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

pongal seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe