Skip to main content

“ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால் தமிழக அரசியல் போக்கே மாறியிருக்கும்” - சீமான் உருக்கம்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Seeman personally paid tribute to Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். 

இந்த நிலையில் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ விஜயகாந்த் என்றாலே; அச்சமின்மையும் துணிவும்தான்; தவசி படத்தில்  நான் தான் உரையாடல் எழுதினேன். அப்போது அவருடன் சேர்ந்து பணியாற்றவும், நிறைய நேரம் பேசவும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. விஜயகாந்த் போன்று நடிக்கவும், சண்டைபோடவும் யார் வேண்டுமானாலும் வரலாம்; ஆனால் அவர் மாதிரி ஒரு சிறந்த மனிதர் வருவது மிகவும் கடினம். திரையுலகில் புகழின் உச்சிக்கு சென்ற பிறகு தலையில் ஏற்றிக்கொள்ளாமல் பார்த்துக் கொண்டார். எல்லாரிடமும் சமமாக பழகக்கூடிய ஒரு மனிதர் விஜயகாந்த். அவரை போன்று திரையுலகின் வேறு யாரும் இல்லை. ரஜினி, கமல் என யாரா இருந்தாலும் விஜயகாந்த் சொன்னால் கேட்பார்கள்; அனைவரும் விஜி விஜி என்று பாசமாக இருந்தார்கள். அதற்கு காரணம் அவர் எல்லார் மேலயும் வைத்த பாசம் தான். அப்படிப்பட்ட மனிதர் தற்போது இல்லை என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை. 

விஜயகாந்த் மட்டும் முழு உடல்நலத்துடன் இருந்திருந்தால் தமிழக அரசியலின் போக்கையே மாற்றியிருக்கும்; அப்படி போக்கையே மாற்றியவர்தான் விஜயகாந்த். முதல் தேர்தலிலே 6 சதவீத வாக்கும், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் 10.5 சதவீத வாக்கு என மேலே போகும் போது, அதுவும் கலைஞர், ஜெயலலிதா என்று பெரும் தலைவர்கள் இருக்கும் போது பெரும் துணிச்சல் வேண்டும். அதனால்தான் அவரை துணிச்சல்காரர் என்று சொல்கிறோம்; கடினமான உழைப்பாளி. வெயில், மழை, பசி, பட்டினி, 3, 4 நாட்கள் தூங்காமல் எல்லாம் நடிப்பார். அந்த மாதிரி தமிழ்த் திரையுலகில் யாரும் இல்லை; அவரை நல்ல மனிதர் என்று ஒரு வார்த்தையில் அடக்கிவிட முடியாது; ஆகச்சிறந்த மனிதர்;

படபிடிப்புக்கு சென்று அவர்கள் கொடுக்கும் பேண்ட், சட்டைகளை அணிவாரே தவிர; மற்றபடி அனைத்து நேரமும் கதர் சட்டை, கதர் வேஷ்டி மட்டும் தான் அணிவார். மிகவும் எளிமையான மனிதர். அப்படிப்பட்ட மனிதர் இல்லாதது வருத்தமாகத்தான் இருக்கிறது. எப்படி வெள்ளம் போன்ற பேரிடர் வந்து பேரிழப்பை தந்ததோ, அத போன்றுதான் விஜயகாந்த்தின் இழப்பு ஒரு பேரிடரை போன்று பேரிழப்பை தந்துள்ளது” என்று வருத்தத்துடன் பேசினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.