
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு காவல்துறையில் புகாரளித்திருந்தார். வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் இதனையடுத்து தான் அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுக் கொண்டார்.இருப்பினும், விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனச் சீமான் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ‘கடந்த 2011ஆம் ஆண்டு அளித்த புகாரை, 2012ஆம் ஆண்டிலேயே விஜயலட்சுமி திரும்பப் பெற்றுக் கொண்டார். அந்த கடிதத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தி போலீசார் இந்த வழக்கை முடித்து வைத்துவிட்டனர். ஆனால், வேண்டுமென்றே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு மீதான வழக்கு கடந்த 17ஆம் தேதி (17.02.2025) அன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் நீதிபதி, ‘விஜயலட்சுமி இந்த வழக்கைத் திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது.
சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது’ என்று கூறி சீமானின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். மேலும் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை, 12 வாரக் காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சீமானுக்கு வளசரவாக்கம் காவல் துறையினர் சம்மன் அனுப்பினர். அதில் இன்று (27.02.2025) காலை 10 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் நடிகை விஜயலட்சுமியிடம் நேற்று (26.02.2025) வளசரவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இருப்பினும் சம்மனில் குறிப்பிட்டிருந்தபடி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இருப்பினும் அவர் கட்சிப் பணிக்காகச் சென்றிருப்பதாகக் கூறி அவரது சார்பில் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இதன் காரணமாக நாளை (28.02.2025) காலை 11 மணிக்குச் சீமான் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள வீட்டில் சம்மனை ஒட்டினர். அதில், ‘ விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது வீட்டில் இருந்து வந்த நபர் ஒருவரால் கிழிக்கப்பட்டது.

இந்த சம்மனைக் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரைச் சீமான் வீட்டுக் காவலாளி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சீமானின் வீட்டிற்குள் நுழைய முயன்ற போலீசாரை தாக்கிய வீட்டுக் காவலாளி கைது செய்யப்பட்டார். காவலாளி வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் கேட்டபோது தர மறுத்துள்ளார். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதே சமயம் காவலாளி முன்னாள் ராணுவ வீரர் என்பதால் அவரிடம் துப்பாக்கி இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்குச் சீமான் மனைவி காவல் ஆய்வாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.