Skip to main content

“மொழிவாரி கணக்கெடுப்பு வேண்டும்..” - சீமான் வலியுறுத்தல்!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

Seeman addressed press at erode

 

ஈரோட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு, டிசம்பர் 14ஆம் தேதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி சார்பில், 'தமிழர் எழுச்சி உரை வீச்சு' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சிப் பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் பங்கேற்றனர். 

 

இந்தப் பொதுக் கூட்டத்தில் பேசிய மூன்று பேரும், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக, மூன்று பேர் மீதும் வழக்குப் போடப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசுதல், கலவரத்தை தூண்டுதல், சட்ட விரோதமாகப் பேசுதல் என்ற இந்த மூன்று பிரிவுகளில் பதியப்பட்ட வழக்கு, ஈரோடு முதலாவது குற்றவியல் மன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில், இன்று (17ஆம் தேதி) ஈரோடு நீதிமன்றத்திற்கு சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் நேரில் வந்து, ஈரோடு முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக் கொண்டனர். பிறகு சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களின் இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக, ஈரோடு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு பிணையில் விடுதலையானோம். 


இன்று கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளோம். மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி ஆஜராக இருக்கிறோம்.


வருகிற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துத்தான் போட்டியிடுவோம். யார் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும், அதைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலை இல்லை. அது குறித்தான எந்த மாற்றுச் சிந்தனையும் இல்லை. யார் யாருடனும் கை கோர்க்கலாம். ஆனால், நாங்கள் மக்களுடன் கைகோர்த்துத்தான் போட்டியிடுகிறோம். யார் யாருடன் கூட்டு வைத்தாலும் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. 


எங்கள் கொள்கை, எங்கள் பாதை, எங்கள் பயணம் தமிழக மக்களுக்கானது. ஆகவே தனித்துப் போட்டியிடுகிறோம். என்னைப் பொறுத்தவரை முழுமையாக தமிழக மக்களை நம்புகிறேன். மக்களிடம் வேளாண் சட்டம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும். அல்லது வெளிப்படை தன்மை உள்ள அறிக்கையை வெளியிட வேண்டும். செயற்கையான முறையில், அத்தியாவசியப் பொருள் தட்டுப்பாட்டை மக்களிடத்தில் உருவாக்கி, மக்களைப் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கும் இந்தச் சட்டத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம்.

 

cnc

 

மத்திய அமைச்சரவையில் உள்ள தலைவர்கள் அல்லது தமிழகத்தில் உள்ள யாராவது ஒருவர் விவசாயிகளின் வேளாண் சட்டத்தில் உள்ள நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். நாங்கள் மக்களுடன் விவசாயிகளுடன் சேர்ந்து வேளாண் சட்டத்தை எதிர்க்கிறோம். மத்தியில் ஆளும் பா.ஜ.க மோடி அரசு, மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் இப்படிப்பட்ட சட்டத்தை கொண்டுவருவது வேதனை அளிக்கிறது.


வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்பது சரிதான், அதேபோல் மொழிவாரியாகவும் ஒரு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். திராவிடக் கட்சிகளுக்கு அதன் ஆட்சிகளுக்கு மாற்றாக ஒரு திராவிடக் கட்சித் தலைவரையே முன்மாதிரியாகக் கூறுவது ஏற்புடையது அல்ல. நாங்கள் பெருந்தலைவர் காமராஜர், ஐயா ஜீவானந்தம், பொதுவுடைமை சிற்பி சிங்காரவேலர் நேர்மையான தலைவரான கக்கன் வழியிலும் தூய்மையான அரசியலை முன்னெடுக்கிறோம். அவர்கள் எம்.ஜி.ஆரை முன்னிறுத்த நினைக்கின்றார்கள். நாங்கள், தலைவர் பிரபாகரனை முன்னிறுத்தியுள்ளோம். எங்கள் கோட்பாடு தனித்துவமானது.” எனக் கூறினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்