Skip to main content

வைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல்-சீமான்

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று 05-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய வல்லாதிக்கமும், சிங்களப் பேரினவாதமும் சேர்ந்து ஈழ மண்ணில் நிகழ்த்திய இனப்படுகொலையைக் கண்டித்து, கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ‘நான் குற்றஞ்சாட்டுகிறேன்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் மன்மோகன் சிங் தலைமையிலான அப்போதைய காங்கிரசு அரசுதான் ஈழப்போரை நடத்தி மக்களைக் கொன்றுகுவிக்கிறது எனக் குற்றஞ்சுமத்தி பேசியதற்காக அப்போதையத் திமுக அரசு, அண்ணன் வைகோ மீது தேசத்துரோக வழக்கைப் பாய்ச்சியது. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகச் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பத்தாண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் தற்போது அண்ணன் வைகோ குற்றவாளி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற கருத்துரிமையின் மீதான தாக்குதலாகவே நான் கருதுகிறேன்.

seeman about verdict of vaiko case!


இலங்கை அரசுக்குப் பணமும், ஆயுதமும் கொடுத்து ஈழப்போரைப் பின்நின்று நடத்தி திட்டமிட்ட இனப்படுகொலையை நிகழ்த்த முழுக்க முழுக்கத் துணைநின்றது அன்றைய காங்கிரசு – திமுக கூட்டணி அரசு என்பதை உலகறியும். ‘இந்தியா விரும்பியே போரை நடத்தினோம்’ என இனப்படுகொலையாளன் ராஜபக்சேவும், அவனது சகோதரர்களும் இன்றைக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்த மகத்தான உண்மையைத்தான், அன்றைக்கு உலகுக்கு உரத்துக் கூறியிருக்கிறார் வைகோ. அதற்காகத் தற்போது அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை அளித்திருப்பதை சனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட எவராலும் ஏற்க முடியாது.

‘தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது ஒருபோதும் குற்றமாகாது’ என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழக்கொன்றில் தெளிவுப்படுத்தியிருக்கிற சூழலில், தற்போது விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அண்ணன் வைகோவிற்கு தண்டனை வழங்கியிருப்பது ஏற்கனவே வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கின்ற செயல். தங்கள் மீது இனப்படுகொலையின் குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாது,அது வரலாற்றின் ஏடுகளில் இருந்து மறைக்கப்பட வேண்டும் என்ற காரணங்களுக்காக அன்றைய காங்கிரஸ் ஆதரவு திமுக அரசு அண்ணன் வைகோ மீது தேசத்துரோக வழக்கினை பதிவு செய்தது.தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதிக்கு எதிராக, லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக, குரல்கொடுக்க, உள்ளத்து உணர்வுகளை வெளிக்காட்டப் பேசுவது எப்படி இந்த நாட்டிற்கு எதிரான தேசத்துரோக குற்றமாகும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

 

seeman about verdict of vaiko case!


நாட்டு மக்களை மதத்தின் பெயரால் துண்டாடி சொந்த நாட்டு மக்களையே அடித்துஉதைத்து அந்நிய நாட்டிற்குப் போகச் சொல்வதும், மதத்தை காரணம் காட்டி சொந்த நாட்டின் பெண்களையே பாலியல் பலாத்காரம் செய்ய சொல்லுவதும், பச்சிளம் பிள்ளைகளை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவதும், விரும்பியக் கல்வியைக் கற்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டு நீட் தேர்வினால் பச்சிளம் பிள்ளைகளின் கனவைக் கருக்கி உயிரைக்குடிப்பதும், தங்களது நெடுநாள் உழைப்பினால் விளைந்தப் பணத்தை எடுத்துப் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பணமதிப்பிழப்பு எனும் பொருளாதாரப் படையெடுப்பைச் சொந்த நாட்டின் குடிமக்கள் தொடுத்து நூறு கோடி மக்களையும் வீதியில் நிற்கச் செய்ததும் விரும்பிய மார்க்கத்தையும், விரும்பிய உணவையும்கூட தேர்ந்தெடுக்காத முடியாத அளவுக்குச் சகிப்புத்தன்மையைக் குலைத்து அச்சுறுத்தலை நாட்டு மக்களிடம் ஏற்படுத்தி அவர்களைப் பீதியடையச் செய்வதும் தான் உண்மையான தேசத்துரோக செயல்பாடுகள். ஆனால் இவையாவும் தேசத்துரோகக் குற்றமாகத் தெரியாத இந்நாட்டின் நீதித்துறைக்கு, விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசுவதும், அழித்தொழிக்கப்பட்ட ஒரு இனத்தின் வலியைத் தாங்கி நீதிகேட்பதும்தான் தேசத்துரோகக் குற்றமாகத் தெரிவது நம் நாட்டின் நீதி பரிபாலன முறைகளில் பாரபட்ச தன்மை இருப்பதை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

இன்னும் சில நாட்களில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க இருக்கிற நிலையில் பல நாட்கள் நிலுவையில் இருந்த இவ்வழக்கில் திடீரென அண்ணன் வைகோவைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிப்பது என்பது நீதித்துறையின் செயல்பாடுகள் மீதான சந்தேகங்களையும் வினாக்களையும் எழுப்புகிறது . ஈழத் தாயகத்தின் விடுதலைக்காக இறுதிவரை களத்தில் நின்று போராடிய விடுதலைப்புலிகளை ஆதரித்ததற்காக தேசத்துரோகி எனப்பழி சுமத்தப்பட்டுத் தண்டனைப் பெற்றுள்ள அண்ணன் வைகோ அவர்களுக்கு மேல்முறையீட்டில் நீதி கிடைக்க அவரது கருத்துரிமை சார்ந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி உடனிருக்கும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.