ADVERTISEMENT

லயோலா கல்லூரிக்கு எதிரான மதவாதிகளின் அச்சுறுத்தலை முறியடித்துக் கல்லூரியைக் காக்கத் துணை நிற்போம் – சீமான்  

02:54 PM Jan 23, 2019 | Anonymous (not verified)


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ’’லயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடகமையம் இணைந்து நடத்திய ஆறாம் ஆண்டு ‘வீதி விருது விழாவில்’ கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்களுக்கு அக்கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கோரிவிட்ட பிறகும் இதனை வேண்டுமென்றே அரசியலாக்கி அதன்மூலம் ஆதாயம் தேட முயலும் இந்துத்துவ இயக்கங்களின் கீழ்த்தரமான செயல்கள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது.

ADVERTISEMENT

நாட்டில் நிலவும் அசாதாரணச் சூழ்நிலையினையையும், கருத்துரிமை மீது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களையும், பெண்களின் பாதுகாப்பற்ற நிலையினையும், கருத்தாளர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் விடுக்கப்படுகிற அச்சுறுத்தல்களையும் ஓவியங்களின் மூலமாகத் தெரிவிக்கும்விதமாக ‘கருத்துரிமை ஓவியங்கள்’ எனும் பெயரில் நாட்டின் சிக்கல்களை மையப்படுத்தி முகிலன் என்பவர் வரைந்த ஓவியங்கள் லயோலா கல்லூரியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவை நாட்டில் நிலவும் நிலையினை அப்பட்டமாக வெளிக்காட்டுவதாலும், இந்துத்துவாவின் கோர முகத்தினையும், போலித் தேசப்பற்றினையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதாலும் கோபம் கொண்ட இந்துத்துவ அடிப்படைவாதிகள் அதற்கெதிராக விடுத்து வரும் மிரட்டல்களிலிருந்தும், அச்சுறுத்தல்களிலிருந்தும் லயோலா கல்லூரியைக் காக்க வேண்டியது சனநாயகவாதிகளின் தலையாயக் கடமையாகும். அரசுடைமையாக இருந்த நல்லவற்றை எல்லாம் தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு நல்லபடியாக இயங்கும் லயோலா கல்லூரியை இந்த ஒரு சம்பவத்திற்காக அரசுடைமையாக்கவேண்டும் என்பதெல்லாம் அப்பட்டமான அடிப்படைவாத அரசியல்.

ADVERTISEMENT

அதுவும் கண்காட்சி ஓவியங்களுக்குக் கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கோரிவிட்டபிறகும் அக்கல்லூரிக்கு எதிராக இந்துத்துவ இயக்கங்கள் ஆற்றிவரும் எதிர்வினைகள் யாவும் தேவையற்றது; முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஆகவே, இத்தகைய அடக்குமுறைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் எதிராக, லயோலா கல்லூரியைக் காக்க அரணாக நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என இத்தருணத்தில் உறுதியளிக்கிறேன்.’’

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT