Advertisment

தமிழ் தெரியாதவர்கள் தமிழர் நிலத்தில் சிவில் நீதிபதிகளா? -வெடிக்கும் சீமான்

தமிழ் தெரியாதவர்கள் தமிழர் நிலத்தில் சிவில் நீதிபதிகளாக ஆகிவிட முடியும் என்பது தமிழ்மொழியை ஒட்டுமொத்தமாகத் அழிக்கிற செயல் என்று வெடிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஒரு தேசிய இனத்தின் முகமாக, முகவரியாக விளங்குவது அந்தத் தேசிய இனத்தின் தாய்மொழியாகும். உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான, உலகத்தின் தாய் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக விளங்குகிற தமிழ் மொழியைத தமிழராகிய நாம் தாய்மொழியாக பெற்றிருக்கிறோம் என்பது நம் இனத்தின் பெருமையாக இருக்கிறது.

Advertisment

s

வேறு எந்த மொழிக்கும் இல்லாத தனிச்சிறப்புகள் தமிழ் மொழிக்குண்டு. வேறு எந்த இனத்திலும் தன் தாய் மொழியினை தனது இயற்பெயரோடு யாரும் சுமப்பதில்லை. ஆனால், தமிழ் மொழியை தனது இயற்பெயரோடு தமிழ்ச்செல்வன் என்றும், தமிழ்வேந்தன் என்றும், தமிழழகன் என்றும், தமிழினி என்றும்‌ தன் பெயரோடு தன் மொழியையும் இணைத்தே சுமப்பவர்கள் தமிழர்கள் மட்டுமே. தனது பெயரிலும் மட்டுமல்ல தனது நாட்டின் பெயரிலும் தமிழ் மொழியை இணைத்து ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர்கள் தமிழர்கள். எனவேதான், நம் இனத்தின் புரட்சிப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன், ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று முழங்கினார். ஆனால், தமிழ்நாட்டில் இன்று எங்கும் இடம் இல்லை’’என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

அவர் மேலும், ‘’கல்வி நிலையங்களில், வழிபாட்டுத்தளங்களில், அரசு அலுவலகங்களில், வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் உயர்நீதிமன்றங்களில் என எங்கும் தமிழ் மொழிக்கு இடமில்லை. தன் சொந்த நிலத்திலேயே நம் உயிருக்கு மேலான நம் தாய்மொழிக்கு இடமில்லாத நிலை என்பது அவமானகரமானது. ‘ஒரு இனத்தை அழிப்பதற்கு அந்த இனத்தின் மக்களை கொலை செய்யத்தேவையில்லை; மாறாக, அந்த இனத்தின் மொழியை அழித்தால் போதுமானது’ என்கிறார் மொழியியல் அறிஞர் ஐயா பாவாணர். அப்படித்தான் நம் தாய்மொழியான தமிழ்மொழி சிறிது சிறிதாக நமது நிலத்திலேயே திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் தமிழ் மொழிக்கான இடம் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு தமிழ் மொழி கற்காமலேயே கல்லூரி கல்வி வரை முடித்து விடுகிற அவல நிலை நம் தமிழ்நாட்டில் நிலவுகிறது. தாய்மொழி கல்விக்கான எவ்விதமான ஆக்கப்பூர்வமான செயல்களையும் இதுவரை ஆண்ட அரசுகளோ தற்போது ஆளுகின்ற அரசுகளோ செய்ததில்லை.

உயர்நீதிமன்றங்களில் தமிழ் மொழி பயன்படுத்திட அனுமதி வேண்டி நீண்டகாலமாக வழக்கறிஞர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் நியாயமான கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்காமல் புறந்தள்ளி வருவதென்பது சகிக்க முடியாதப் பெருங்கொடுமை. உயர்நீதிமன்றங்களில் ஏற்கனவே தமிழ் மொழி இல்லாத நிலைமை நீடிக்கிறது. இப்போது எளிய மக்கள் இறுதியான நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற கீழமை நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியை இல்லாமல் ஆக்குகிற வேலையை மத்திய, மாநில அரசுகள் செய்யத் தொடங்கி இருப்பது என்பது ஏற்கனவே அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிற தமிழ்மொழியை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான செயல்திட்டமேயாகும்.

தமிழ்மொழி தெரியாமலேயே தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் நீதிபதியாக ஆகிவிட முடியும் என்கிற நிலையை உருவாக்குவதன் மூலமாக தமிழ்நாட்டு நீதிமன்றங்களை தமிழ்மொழி தெரியாத, தமிழர்கள் அல்லாதவர்களின் கையில் ஒப்படைப்பதற்கான பெரும் சதியாகவே இதைக் கருதுகிறேன். அவ்வாறு நடந்தால் சாமானிய மக்கள் தங்களது இறுதி நம்பிக்கையாக கொண்டிருக்கிற நீதி பரிபாலன முறை முற்றிலுமாகத தகர்க்கப்படும். தமிழ்மொழி தெரியாத நீதிபதிகள் நீதிமன்றங்களில் வந்து அமரும்போது மக்களின் சாட்சியங்களை, வழக்கறிஞர்களின் வாதங்களை, நமது மண்ணின் வாழ்வியல் பண்பாட்டு அம்சங்களை புரிந்து கொள்ள முடியாமல் தவறாகத தீர்ப்பு வழங்கி விடக்கூடிய மாபெரும் அபாயம் இன்று தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த அபாயத்தை புரிந்து கொண்டுதான் பெருமதிப்பிற்குரிய வழக்கறிஞர்கள் பெருமக்கள் தமிழ் சமூகத்தை காப்பாற்றிட மாபெரும் போராட்டங்களை தொடங்கியுள்ளார்கள்.

தமிழ்ச்சமூகத்தின் எல்லாவிதப போராட்டங்களிலும் இந்த மண்ணைக் காக்க தமிழர்களின் உரிமையை காக்க இரத்தம் சிந்தி உறுதியாகப் போராடி வருபவர்கள் தமிழக வழக்கறிஞர் பெருமக்கள் ஆவர். ஈழ விடுதலை ஆதரவுப் போராட்டம் தொடங்கி எண்ணற்றப் போராட்டங்களில் வழக்கறிஞர்களின் உறுதியான போராட்டங்களே தமிழ் மண்ணை காக்கிற பெரும் ஆயுதங்களாக திகழ்கின்றன.

தமிழ் தெரியாதவர்கள் சிவில் நீதிபதிகளாக ஆகிவிடலாம் என்கின்ற வகையில், 2016ல் தமிழக அரசு தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் ஆணை பிறப்பித்தது. இந்த TNPSC அறிவிப்பாணை 25/2019யைத் திரும்பப் பெறக்கோரி வழக்கறிஞர்கள் தமிழ்நாடெங்கும் இன்று நடத்துகிற மாபெரும் உண்ணாநிலை போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு, அப்போராட்டம் மாபெரும் வெற்றியடைய எனது புரட்சிகர வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். என்றென்றும் பெருமதிப்பிற்குரிய வழக்கறிஞர்கள் சமூகத்திற்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும், அவர்களது போராட்டத்தை முழுமையாக ஆதரித்து அவர்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடன் நிற்கும் என்றும் இத்தருணத்தில் உறுதியளிக்கிறேன்.’’என்று ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe